ஐ.நா : புதிர் – மாயை – உண்மை

கருணாகரன்

 

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே இலங்கை அரசாங்கம் ஐ.நா.வின் 30 ஃ 1 தீர்மானத்திலிருந்து விலகிவிட்டது. அதாவதுஇ 30 ஃ 1 இல் வலியுறுத்தப்பட்டிருக்கும் “நடந்து முடிந்த போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறலுக்கும் பொறுப்புக் கூறல் வேண்டும். நல்லிணக்கம் கட்டி எழுப்பப்பட வேண்டும். நிலைமாற்றதுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். மீள நிகழாமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்” என்பவற்றை ஏற்று கூட்டுப்பொறிமுறைக்கு உடன்பட்டிருந்த நிலையிலிருந்து இலங்கை விலகுவதாக அறிவித்திருக்கிறது.

பதிலாக இவற்றை வெளித்தலையீடுகளற்ற முறையில் அரசாங்கம் தானே சுயாதீனமாகச் செய்யும் என்று அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன விடுத்திருக்கிறார்.

இலங்கையின் இந்த முடிவுக்கு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிக்செல் பச்லெட் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். கூடவே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச மனித உரிமைகள் பேரவை போன்றவையும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதை கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளும் ஆட்சேபித்திருக்கின்றன. கனடியப் பிரதமர் ருடோ தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

தமிழ்த் தரப்பிலும் அநேகமான அரசியல் கட்சிகள் இதைக் கண்டித்துள்ளன. இலங்கையின் இந்த முடிவானது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை இலங்கைக்கு ஏற்படுத்தும் என்று தமிழ்த் தலைவர்களும் எச்சரித்திருக்கிறார்கள். சர்வதேச சமூகம் இதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இலங்கை அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இதற்கு அரசாங்கம் பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன். மனித உரிமை ஆர்வலர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் இந்த விடயத்தில் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க.

ஆனால் அரசாங்கத்தை எந்த வகையிலும் எந்தச் சக்திகளும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. அப்படிச் செய்வது நாட்டின் இறைமைக்குச் சவாலானதாகவே அமையும் என்று சொல்லியிருக்கிறார் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியாகிய ஹெகலிய ரம்புக்வெல. இதை வலியுறுத்திப் பேசியுள்ளார் இன்னொரு முக்கியஸ்தரான ஜீ.எல்.பீரிஸ். இவர்கள் மட்டுமல்ல அரசாங்கத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரு அலைவரிசையில் இதை வெளிப்படுத்தி வருகிறார்கள். “எங்களின் இறைமையில் எவரும் தலையிடவே முடியாது” என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ.

இப்படிச் சொல்லி எளிதில் இந்த விசயத்தைக் கடந்து விட முடியாது. இதற்கான விளைவுகள் பாரதூரமானவையாக இருக்கும். அதை அரசாங்கம் எதிர்கொண்டே தீர வேண்டும். குறிப்பாக இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிக்கக் கூடிய நிலை ஏற்படலாம் என்று எதிர்த்தரப்பினர் அரசாங்கத்தையும் மக்களையும் எச்சரித்துள்ளனர்.

ஆனால் “அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. பொருளாதாரத் தடையை விதிப்பதற்கு இந்த விடயம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். பாதுகாப்புச் சபையில் உள்ள அத்தனை நாடுகளின் சம்மதம் கிடைத்தாலே பொருளாதாரத் தடையைப் பற்றிச் சிந்திக்க முடியும். அதற்கான சூழல் இல்லை. இலங்கைக்கு எதிராக எல்லா நாடுகளும் தீர்மானத்தை எடுக்காது. பிரித்தானியாவும் கனடாவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் அவர்களுடைய வாக்குகளையும் பற்றிச் சிந்தித்துப் பேசுகின்றன. அதற்காக நாம் எங்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று கூறுகிறார் ஹெகலிய ரம்புக்வெல.

இப்படி இந்த விடயம் இப்பொழுது பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவை தீர்மானம் தொடர்பான 30 ஃ 1 அறிக்கை வெளிவந்தது. இதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் உடன்பட்டிருந்தது. ஆனால்இ இதை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாதென கால அவகாசம் கேட்டிருந்தது. இந்தக் கால அவகாசத்தை அரசாங்கத்திற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பெற்றுக் கொடுத்தது. இதில் முக்கியமான பங்கையும் பாத்திரத்தையும் வகித்தவர் கூட்டமைப்பின் பேச்சாளர் ஆபிரஹாம் சுமந்திரன். இதற்குப் பிறகு 2017 இல் மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீடிப்பைப் பெற்றுக் கொடுத்தார் சுமந்திரன்.

சுமந்திரனுடைய இந்தச் செயற்பாட்டினை அப்பொழுது பலரும் கண்டித்திருந்தனர். கால நீடிப்பென்பது தாமதமான நீதிக்குச் சமம். தாமதமான நீதி என்பது இல்லை என்பதாகும். அது பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யும் அநீதி. மட்டுமல்ல அது குற்றஞ்சாட்டப்பட்டவரின் தரப்பைப் பாதுகாப்பதாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் இதைப்பற்றிச் சுமந்திரன் பொருட்படுத்தவேயில்லை. அப்பொழுது அவர் ஆதரித்த ஐ.தே.க அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தார்.

இதனால் 30 ஃ 1 நடைமுறைப்படுத்தப்படாமல் ஒத்திப் போடப்பட்டது. அந்த ஒத்திப்போடல் இன்று விலக்கலாகியுள்ளது. அதாவது இப்படியான ஒரு நிலைக்குள்ளாகியுள்ளது. இப்பொழுது இதைப்பற்றி்ப் புலம்புவதால் என்ன பயன்? ஆனால் இதை மறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் விலகல் பற்றிப் போர்க்கொடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார் சுமந்திரன். அரசியலில் அடுத்த கணம் எப்படியிருக்கும்? அடுத்த வினாடி என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது என்பது பொது அறிவு.

சுமந்திரனுக்கு இது தெரியாது என்றில்லை. தெரிந்து கொண்டே இதை அவர் செய்தார். புலிகளுக்கும் போர்க்குற்றத்தில் பொறுப்பும் பங்கும் உண்டெனச் சொன்னவருக்கு இதெல்லாம் தெரியாதென்றால் அது ஏமாற்றுதலாகவே இருக்கும். அவருக்கு அப்பேதைய தேவைகள் வேறாக இருந்தன. அன்றைய நோக்கு வேறு. அதனால்தான் இன்று அவர் போர்க்குரலை எழுப்பிச் சவாலடிக்கிறார்.

இதனால் பயனென்ன?

ஆனால் விதிமுறையின்படி 2021 வரையில் இந்த விலகலைச் செய்ய முடியாது என்று கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க. இருக்கலாம். அடுத்த ஆண்டு வரையில் இது ஒரு விவாதப்பொருளாக நீளலாம்.

ஆனால் இந்த அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் ஒரு உறுதியான முடிவை எடுத்திருக்கிறது. சரியான முடிவு என்பதற்கு அப்பால் உறுதியான முடிவு என்றே சொல்ல வேண்டும். இந்த விவகாரம் எந்த விதமான நடவடிக்கைக்கும் உட்படாமல் வெறுமனே இழுபட்டுக் கொண்டிருப்பதையும் விட ஏதோ ஒரு முடிவை எட்டுவதற்கு இந்த முடிவு வாய்ப்பளிக்கப்போகிறது. முக்கியமாக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் எல்லைகள் என்ன? சர்வதேச சமூகத்தின் செல்வாக்கு எந்தளவுக்கானது? மனித உரிமைகள் கண்காணிப்பகம்இ மனித உரிமைகள் பேரவை போன்றவற்றின் வலு என்ன? என்று அறிவதற்கான ஒரு வாய்ப்பை அரசாங்கத்தின் இந்த விலகல் முடிவு தந்துள்ளது.

அரசாங்கம் கூட இதில் வெல்லலலாம். அல்லது நெருக்கடிக்குள்ளாகலாம். ஆனால் அரசாங்கத்தரப்பின் முக்கிய தரப்பினர் சொல்வதைப்போல அல்லது கருதுவதைப்போல அரசை யாரும் எதுவும் செய்ய முடியாது போகலாம். அப்படியென்றால் அரசாங்கம் சொல்வதைப்போல பாதிக்கப்பட்டோருக்கான நீதியை எப்படி வழங்கப்போகிறது? மீள நிகழாமையை அது எப்படி உறுதிப்படுத்தப்போகிறது? நல்லிணக்கத்தை எட்டுவதற்கான அதனுடைய பொறிமுறை என்ன? அமைதித்தீர்வுக்கான வழிமுறையும் பாதையும் என்ன? அதை உள்நாட்டுப் பொறிமுறையில் தான் வழங்குவதாகச் சொன்னாலும் அது திருப்திகரமான முறையில் இருக்குமா? என்ற கேள்விகளுண்டு.

இதற்கான பதிலை அரசாங்கம் தெளிவாகவும் பாதிக்கப்பட்டோர் நம்பும் வகையிலும் சொல்ல வேண்டும். ஜனாதிபதி கோட்டபாய வித்தியாசமாகச் சிந்திப்பவர். மாற்றாகச் செயற்படுகின்றவர். நேர்மையானவர் என்ற தோற்றம் பொதுவெளியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை அவர் இதிலும் மெய்யாக நிரூபிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது மனுநீதி்ச் சோழனான இருக்க வேண்டும் என்று.

இதேவேளை இலங்கையின் விலகல் தொடர்பாக ஐ.நாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே தமிழ்த்தரப்பின் ஜெனிவாப் பயணங்கள் அமையப்போகின்றன. தமிழர்களின் ஜெனீவா பற்றிய புதிரும் மாயையும் உண்மையும் கூட தெரியப்போகிறது. உண்மையில் அரசாங்கத்தின் இந்த விலகல் முடிவானது மக்களையும் விட தமிழ் அரசியல் பிரமுகர்களையே கடுமையாகப் பாதித்துள்ளது. அவர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஜெனீவாவுக்குப் போதல் என்ற வருடாந்தச் சடங்கில்லை என்றால் எத்தனை பிரமுகர்களின் நலனில் இடி விழும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் 58 ஆண்டுகளுக்கு முன்பு 1962 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் ஜெனிவாவுக்குச் சென்று இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையைப் பற்றிச் பேச முயன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் மிகமிக வறுமைச் சூழலில் சிக்கித்தவித்த மனிதர் அவர். கடன்பட்டுக் கொண்டே இந்தப் பயணத்தை அவர் செய்திருந்தார். அப்படிச் சென்றிருந்த போதும் அவரால் உரிய அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. அதனால் கடிதம் ஒன்றை விரிவாக எழுதிக் கொடுத்து விட்டுத் திரும்பினார். இப்போதுள்ள ஆட்களைப் போல அவர் எந்தப் படத்தையும் யாருக்கும் காட்டவில்லை. அவருக்கு அதற்கான தேவையும் தன் மைய நோக்குமிருக்கவில்லை. அதனால்தான் அவரால் இப்படி விசுவாசமாகச் செய்ய முடிந்தது.

இன்னொருவர் ஈழத்தமிழரின் நிலைவரத்தைப் பற்றி ஐ.நா அரங்கில் எடுத்துப் பேசினார். கிருஸ்ணா என்ற வைகுந்தவாசன். 1978 ஒக்ரோபர் 05 இல் வைகுந்தவாசன் அனுமதியின்றி ஒரு உரையை ஆற்றினார். அந்த உரையில் அவர் இலங்கைத் தமிழரின் நிலைவரம் பாதுகாப்பின்மை பற்றிப் பேசினார். செயல் வீர்கள் இப்படித்தான் தமக்கான களத்தை உருவாக்குவர். ஏனையோர் கூட்டத்தில் கூடி நின்று பிதற்றுவர்.

இலங்கையின் இந்த வேகப் பந்துக்கு யார் எப்படி பதிலளிக்கப்போகின்றனர்? ஆனால்ஒன்று ஜெனிவா யாத்திரைக்கு ஒரு முடிவு வரத்தான் போகிறது.

Leave A Reply

Your email address will not be published.