காஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுக்கள்… அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

மறைந்த கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவரும் பல புகார்களைச் சந்தித்துள்ளார், குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளார். இதுகுறித்த கேள்விகளுக்கு அவர் தயங்காமல் விளக்கமும் அளித்துள்ளார். கியூபாவில் ஜனநாயகம் இல்லாதது ஏன், அங்கு ஒரே ஒரு கட்சி மட்டுமே அனுமதிக்கப்படுவது ஏன், அங்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவதாக கூறப்படுவது ஏன் என்பது குறித்த பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதுகுறித்த தொகுப்பு இதோ…

கியூபாவில் ஜனநாயகமே இல்லை

காஸ்ட்ரோ: வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு அதிக ஜனநாயகத் தன்மை கொண்டது கியூபாவின் அரசியல் அமைப்பு. ஜனநாயகம் என்பது என்ன? உண்மையான ஜனநாயகம் இருக்கவேண்டுமானால் மனிதனை மனிதன் சுரண்டுவது முற்றிலுமாக ஒழியவேண்டும். இதில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். மனிதர்களிடையே சமத்துவமின்மை இருக்கும் வரை எவ்வகை ஜனநாயகமும் இல்லை, இருக்கவும் முடியாது.

 

சோசலிசம் மட்டுமே நல்லது

சோஷலிஸத்தில் மட்டுமே ஜனநாயகம் தழைக்க முடியும். ஜனநாயகத்தின் உச்சநிலை பொதுவுடைமை. ஆனால், நாம் இன்னும் அதனை அடையவில்லை. எங்கள் நாட்டின் ஜன-நாயகம் குறித்தும், ஜனநாயக அமைப்புகள் குறித்தும் ஏகப்பட்ட அறியாமை நிலவுகிறது. எங்கள் ஜனநாயகம் அப்பழுக்கற்றது என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நான் உரிமை கொண்டாடவும் முடியாது. இருந்தாலும், எங்கள் அரசியல் அமைப்பையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்துவதற்காக நாங்கள் பெரும் முயற்சி செய்து வருகிறோம்.

கியூபாவில் எதிர்க் கட்சிகளே இல்லை

காஸ்ட்ரோ: ஒரு நாட்டில், ஒரு கட்சிக்கு மேல் இருப்பது தேவையே இல்லை. கியூபா போன்ற நாடுகளில் முக்கியமான தேவை ஒற்றுமை. அதாவது எங்கள் படைகளின் ஒற்றுமை, நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை. அதுதான், அமெரிக்காவின் அனைத்து அச்சுறுத்தல்களையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து எங்களை உறுதியாக நிற்கச் செய்துள்ளது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பின் வடிவம், இயன்றவரையில் ஒற்றுமையை ஊக்குவிக்கவேண்டும். பல அரசியல் கட்சிகள் உருவானால், அந்த ஒற்றுமைக்கு இடையூறு நேரலாம்.

மரணதண்டனை

காஸ்ட்ரோ: இது கியூபா மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது. சர்வதேச அளவில் விவாதிக்கப்படவேண்டிய ஒரு விஷயம். சமூகத்தைப் பாதுகாக்க இத்தகைய ஆயுதங்களின் துணை தேவைப்படுகிறது. கியூபாவின் அமைதியைக் குலைக்கும் வகையில் பல முயற்சிகளை எதிரி நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால், இத்தகைய முயற்சிகள் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியம். சட்டங்களைப் பயன்படுத்தாமல் நாங்கள் எங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள இயலும்? உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையை ஒழிக்க ஒப்புதல் அளித்தால் நாங்களும் அதை முற்றிலுமாக நீக்கிவிடுவோம்.

புரட்சி இருக்கும் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?

காஸ்ட்ரோ: புரட்சி என்பது ஆண்கள் சார்ந்தது மட்டும் அல்ல. கியூபாவில், பெண்களும் புரட்சியில் பங்குகொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சரிசமமான வாய்ப்புகள் மட்டுமல்ல, பொறுப்புகளும் உள்ளன. கியூபாவில் உள்ள தொழில்நுட்பப் பணியாளர்களில் அறுபது சதவிகிதத்தினர் பெண்கள். அவர்கள், ஆண்களுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள். எந்த வேறுபாடும் கிடையாது. கியூபாவில்தான் விடுதலை அடைந்தவர்களாக, வேலை வாய்ப்பும் பாதுகாப்பும் கல்வியும் உடல்நலப் பராமரிப்பும் உள்ளவர்களாக பெண்கள் இருக்கின்றனர்.
அரசு மீது மக்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை

காஸ்ட்ரோ: கியூபா நாட்டு மக்கள் முற்போக்கானவர்கள். அவர்களுக்கு உறுதியான நடவடிக்கைகள், உறுதியான கோரிக்கைகள், உறுதியான தண்டனைகள் தேவை. பலமுறை புரட்சி கடுமையாகவும், அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டதாகவும் இல்லை என்றே அவர்கள் விமரிசித்திருக்கிறார்கள். போராட்டத்தின் போதோ, எதிர்ப்புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளின்போதோ, புரட்சி மிகவும் கடுமையாக இருந்ததாக ஒருபோதும் விமரிசிக்கப்பட்டதே இல்லை. கியூபாவைப் பொறுத்தவரை, பொதுமக்கள் கருத்துகளுடன் சிக்கல் உண்டு என்றால், அது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காதது குறித்துதானே ஒழிய, மீறல்கள் குறித்து அல்ல.
கியூபாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை

காஸ்ட்ரோ: அமெரிக்காவைப்போல பத்திரிகைச் சுதந்திரம் கியூபாவில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அமெரிக்காவில் பத்திரிகைகள் நடத்துவது தனியார்கள்தான். அவர்கள் சொல்வதுதான் செய்தி. ஆனால், கியூபாவில் அப்படி கிடையாது. இங்கு பத்திரிகை என்பது சமுதாயத்துக்குச் சொந்தமானது. எங்கள் நாட்டு மக்களின் அரசியல் அறிவு உயர்ந்தது. அமெரிக்கர்களைப்போல் மோசம் அல்ல.

தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள்

காஸ்ட்ரோ: எனக்கென்று நான் வைத்துக்கொண்டிருப்பது, எனது தனிப்பட்ட வாழ்க்கை மட்டும்தான். என்னிடம் அதைத்தவிர வேறு இல்லை. அதனை, நான் என் சொந்தப் பாதுகாப்பில் வைத்துள்ளேன். ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை, விளம்பரத்துக்காகவோ அரசியலுக்காகவோ பயன்படுத்தக் கூடாது என்று நான் நினைக்கிறேன்.

நன்றி: சிம்ம சொப்பனம் – ஃபிடல் காஸ்ட்ரோ (நூல் வெளியீடு – கிழக்கு பதிப்பகம்) மற்றும் தீக்கதிர்.

Leave A Reply

Your email address will not be published.