கருப்பு யுகத்தின் காலடியில் மலையகத்தின் காணிப்பிரச்சனை

”அனைவரது தேவைகளையும் நிறைவு செய்ய போதிய அனைத்துமே இவ்வுலகில் உள்ளன. ஆனால் ஒவ்வொருவரதும் பேராசைக்குத்
தேவையானது எதுவுமே இங்கு இல்லை.” என்று கூறிய காந்தியின் அரசியல் போக்கோடு உடன்பட முடியாதிருந்தாலும் கூட, அவரின்
இக்கூற்றோேடு உடன்படக் கூடியதாக இருக்கிறது.

பிரிட்டிஷார் இலங்கையைத் தமது காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தி முதலாளித்துவ ஆட்சி முறையையும், கொள்கை, கோட்பாடு, சட்டங்களை பலவந்தமாகப் புகுத்திய போதும்கூட, அனைவரது தேவைகளும் முற்றுமுழுதாகப் பூர்த்திசெய்யப்பட்டிருக்கவில்லை.
ஆசியான் சமூக முறையானது முதலாளித்துவ முறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோதும், இந்திய வம்சாவளியினரான தோட்டத்
தொழிலாளர்களை நவீனத்துக்குள் நுழைய விடாது ஆசியான் முறையிலும் கடும் மோசமான கொத்தடிமை முறைக்குள்ளேயே
அடுக்கியொடுக்கி வைத்திருந்தனர். இந்திய வம்சாவளியினர் பிரிட்டிஷாரின் காணிகளில் உழைக்கும் உயிருள்ள வெறும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 

காணியுரிமையற்ற, கல்வியுரிமையற்ற, இலங்கை அரசியலோடு எந்தவித சம்பந்தமுமற்ற இருண்ட யுகத்திற்குள் மலையக மக்கள்
சிறைவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் வந்தேறு குடிகள், இந்தியர்கள், தோட்டக்காட்டான் என்று புறந்தள்ளி ஒதுக்கிவைக்கப்பட்டனர். இருண்ட யுகம் மாறி தற்போது ஓரளவு பிரகாசம் பரவியிருந்தாலும் அன்றிருந்த அந்த சிறைகட்டமைப்பில் இன்றுவரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை நாட்டின் பிரஜைகளுக்குக் கிடைக்க வேண்டிய ஏராளமான சலுகைகளில் இருந்தும் இவர்கள் தூர வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றிலும், பொருளாதார வளர்ச்சியிலும், வெளிநாடுகளுடனான இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல்
உறவுகளிலும் மலையக மக்கள் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள போதிலும், இன்னமும் அவர்கள் காணிநிலம் அற்றவர்களாகவே
வாழ்ந்து வருகின்றனர். கொத்தடிமை முறையின் புதிய அத்தியாயமான நவீன கொத்தடிமை முறைக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

வெள்ளையரின் கருப்பு தொப்பிக்குள் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த அம்மக்கள், இன்று குட்டி முதலாளித்துவ அரசியல் தலைமைகளின் தொப்பைக்கு மேலுள்ள சட்டைப் பையில் கட்டிப் போடப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தில் பிரதான கோஷமாக காணியுரிமைக் கோசமும்
சம்பள உயர்வுக் கோஷமும் முழங்கினாலும், தேர்தலின் பின்னர் அவர்களால் தெரிவுசெய்யப்படுகின்ற, இத்தனைகாலமும் மலையகத்தை வஞ்சித்துவந்த, கைகட்டித் தலையாட்டும் பொம்மைகளால் அம்மக்களின் உரிமைகோஷம் காட்டிக்கொடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு
வாயடைக்கப்படுகின்றது.

அதேபோன்றதொரு வாயடைப்புத்தான் காணி உரிமை வழங்குவதுபோல் நடத்திவரும் பாசாங்கு நடவடிக்கையாகும். தற்போது
இலங்கையில் காணப்படுகின்ற சட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணி உரிமை வழங்கமுடியாது. அதற்கான
சட்டமூலம் 1946ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டுவிட்டது. இவ்வாறான சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முழுமையாக பாடுபட்டவர் ”தேசப்பிதா” என்று வர்ணிக்கப்படுகின்ற அன்றைய அரசாங்க சபையின் காணியமைச்சர் டி. எஸ். சேனநாயக்க ஆவார்.

இதன்போது, தொழிற்சங்கப் பிரதிநிதியான நாயர் என்பவரால் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல்
செய்யப்பட்டது. இச்சட்டமூலத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய காணியுரிமை, வீட்டுரிமை, குடியிருக்கும் உரிமை
அனைத்தும் இல்லாதுபோகும் என்று அவர் குரல் எழுப்பினார். அந்த குரலுக்கு உயர்நீதிமன்றம் அளித்த பதில்: தோட்டத் தொழிலாளர்களுக்குக்
காணியுரிமை வழங்க முடியாது என்றாகும்.

அன்றைய காலப்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியே இலங்கையில் நடைமுறையில் இருந்ததால் இக்காணிப்பிரச்சினை தொடர்பில் லண்டன்
நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அங்கு இறுதித் தீர்ப்பாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலமேனும் காணியுரிமை வழங்க
முடியாது என்று அமைந்தது. அச்சட்டமானது இன்றுவரை திருத்தி அமைக்கப்படாததன் நிமித்தம், உரித்துடன் காணியுரிமை எவருக்கும்
வழங்க முடியாது. தற்போது காணியுரிமைக்கான உரித்து வழங்குவது போன்ற அரசியல் நாடகமே அரங்கேற்றப்படுகிறது. அதுமட்டுமல்ல!
மலையகத்தையும் தூக்கி நிறுத்தப் போவதாக கூறுகின்ற மலையகத் தலைவர்களால் கூட இச்சட்டமூலத்திற்கு எதிராக மசோதா
சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளின் ஒட்டுமொத்த முடிவாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அடிப்படையாக உணவு, உடை, உறையுள் என்று இருக்கும் அதேவேளை, உலகில் 100 கோடி மக்களுக்கும் அதிகமானோர் குடியிருப்பற்றோராகக் காணப்படுகின்றனர். இது இன்றிருக்கின்ற
முதலாளித்துவக் கட்டமைப்பின் இயலாமைக்கு ஒரு சிறந்தச் சான்றாகும்.

1976 ஆம் ஆண்டு கனடாவின் வான்கூவர் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குடியிருப்பு நிறுவகத்தால் மாநாடு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததோடு, வீட்டுரிமை மற்றும் குடியிருப்பு தொடர்பாக பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானத்தில் பிரதானமான ஒன்றுதான் ஒவ்வொரு நாட்டிலும் குடியிருப்புக்கான அரசியல் ரீதியான அர்ப்பணம் அவசியம் என்பதாகும்.
இத்தீர்மானம் வீட்டுப் பிரச்சினை விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும் என்கிறது. இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்ட
போதும் 1980 வரையில் அது கிடப்பில் போடப்பட்டது.

அதன் பின்பு ஐக்கிய நாடுகள் சபையின் 35வது கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன் போது குறிப்பிட்ட ஒரு தினத்தை வீடற்றோரின் சர்வதேச
நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பின் 1982 டிசம்பர் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 37வது
கூட்டத்தொடர் நடந்தபோது 1987 ஆம் ஆண்டை வீடற்றவர்களுக்கு புகலிடம் தரும் ஆண்டாக பிரகடனம் செய்யப்படவேண்டும் என
தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் 150 உறுப்பினர் நாடுகளும் சேர்ந்து HABITAD என்ற அமைப்பை உருவாக்கினர். இதில் இருபதாவது
நூற்றாண்டில் அனைவருக்கும் புகலிடம் எனும் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி 1986 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒக்டோபர் மாதம் முதல் திங்கள் சர்வதேச வீடமைப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பின் 1992 ஒக்டோபர் 05ஆம் திகதி ”புகலிடமும் நின்றுபிடிக்கக் கூடிய அபிவிருத்தியும்”, ”மகளிரும் புகலிடமும்” என்ற மையப்பொருளில் விசேடமான தினமாக இது குறிப்பிடப்பட்டது.

1935 ஆம் ஆண்டு ”காணிப் பங்கீடு வீடமைப்புத் திட்டம்” என்ற வேலைத்திட்டம் நாட்டில் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் பல வீடமைப்புத்
திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

01. 1978ஆம் ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் அமைக்கும் திட்டம். இத்திட்டத்தின் 720 வீடுகள் கட்டப்பட்டன.
02. 1983 – 1989 காலப்பகுதிகளில் 10 லட்சம் வீடுகள் அமைக்கும் திட்டம். இதில் 1இ50இ000 வீடுகள் கட்டப்பட்டன.
03. 15 லட்சம் வீடுகள் அமைக்கும் திட்டம். (1991 மாலைதீவூ – தெற்காசிய கூட்டத்தொடர்)
04. மாதிரி கிராமங்கள்
05. எழுச்சி கிராமங்கள்
06. கம் உதாவ திட்டம்

இத்திட்டங்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித வீட்டுத் திட்டங்களும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. மகிந்த
ராஜபக்சவின் காலத்தில் மலையகத்தில் மாடி வீட்டுத்திட்டம் என்ற பேச்சு அடிபட்டபோதும் அதுமாயமான இடம் தெரியவில்லை.
தற்போது கடனோடு (பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் – ட்ரஸ்ட்) இணைந்த தோட்டத் தொழிலாளர்கள் வீட்டுத்திட்டமும்
1976ஆம் ஆண்டு பின்னணியின்படி அரசாங்கத்தின் தலையீட்டில் இந்திய வீட்டுத் திட்டமும் அமைக்கப்படுகிறது.

ஆனாலும் இத்திட்டமும் அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை மையப்படுத்தியதாக இருக்கவில்லை. அரசியல் கட்சிசார்ந்தும்,
தொழிற்சங்கம் சார்ந்தும், உறவுகள் மற்றும் இலாப வரவுகள் சார்ந்துமே கட்டிக்கொடுக்கப்படுகிறது. இதனால் கட்டாயம் வீட்டுத்திட்டம் தேவைப்படும் நிலையில் இருக்கும் இன்னும் பலருக்கு வீடுகள் கிடைக்காமல் போகிறது. அத்தோடு அமைத்துக் கொடுக்கப்படுகின்ற வீட்டுத்
திட்டத்திலும் இடவசதி போதாத நிலைமையும் காணப்படுகிறது.

லயன் முறையில் வாழ்ந்தபோது முன், பின் இரு பக்கங்களிலும் தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதுமான இடம் இருந்தது. இவ்விடத்தில் சிறுதானிய பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு போன்றவற்றை
மேற்கொள்ள முடிந்திருந்தது. பொருளாதார நெருக்கடியின் போது இதன் மூலம் ஒருசாண் வயிற்றை நிரப்பிக் கொள்ளமுடியுமாக இருந்தது. ஆனால், இன்றைய வீட்டுத்திட்டத்தில் இடவசதிகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.

லயன் முறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அதேவேளை, சகல வசதிகளும் அடங்கிய, பொருத்தமான பிரதேசத்தில், இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அத்தோடு, அனைவருக்கும் வீட்டுரிமை மற்றும் காணியுரிமைப் பத்திரங்கள் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டும்.

இன்று பெருந்தோட்டத்துறை தூக்கில் தொங்குகிறது. லாபத்தை மட்டுமே இலக்காக கொண்டிருந்த பல்தேசிய கம்பெனிகள் தோட்டங்களை சரியாகப் பராமரிக்காது கைவிட்டுள்ளது. இதனால், தேயிலைத் தோட்ட நிலத்தில் அமிலத்தன்மை அதிகரித்துப்போய் உள்ளது. அதேநேரம், தேயிலை ஆராய்ச்சி, மண் பரிசோதனை நிலையம் கூட மூடுவிழாவை எடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

நிலத்தின் நடுநிலையை பேணுவதற்கு அதிகளவு செலவாகும் என்பதால் பல்தேசிய கம்பனிகள் எந்தவித மாற்று நன்மை பயக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருக்கின்றன. மலையகத்தில் ஒழுங்கான மரங்கள் வளர்ப்புத் திட்டம் காணப்படாததால் மண்ணரிப்பு நிகழ்வதோடு, பாரிய மண்சரிவுகளும் ஏற்படுகின்றன. அதேவேளை, இரசாயன மருந்துகளின் பாவனை அதிகரித்துக் காணப்படுவதால் நிலம் விஷமாகி, மலடாகி செல்கிறது. மலையகத்திற்கே உரித்தான புல், பூண்டுகள், செடிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள்  அருகிபோய்க் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் அரசாங்கத்தால் மலையகத்தின் உணவுசங்கிலி அறுத்து எறியப்பட்டுள்ளது. வாழ்வதற்கு பொருத்தமற்ற பாலைநிலமாக மாறிக்கொண்டிருக்கும் மலையகத்தை புனர்நிர்மானம் செய்யாது காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை
அழித்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இவைகளும் உரிமைப் பத்திரங்கள் அற்றதாகவே காணப்படுகின்றன.

இதுவரையில் பலதோட்டங்கள் பல்தேசிய கம்பனிகளால் மூடப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் இன்னும் பல தோட்டங்கள் இழுத்து மூடப்படலாம். பின்னர் அரசு நிலங்கள் எந்தவித லாபமும் மற்றதாகக் காணப்படுகின்றதெனக் கூறி மூடப்படுகின்ற காணிகளை
நிரந்தரமாகவே பல்தேசியக் கம்பனிகளுக்கு விற்கமுடியும். காணியுரிமையற்றிருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அதன்போது விரட்டியடிக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு லயனுக்கு ஒப்பான தனிவீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுப்பதன் மூலம் மறுபடியும்
புதிய வடிவிலான திறந்தவெளிச்சிறை கொத்தடிமை யுகம் உருவாக்கப்படலாம்.

சதீஸ் செல்வராஜ்

Leave A Reply

Your email address will not be published.