போதிமரத்தில் தூக்கிலிடப்பட்ட உடல்கள்

அந்த இரவின் சித்தார்த்தன் விழிகள் மூடியிருந்தாலும்
விழித்துக் கொண்டுதானிருந்தான்

முதல் நகர் வலத்துடன்
முற்றுப்புள்ளி விழுந்து விட்டிருந்தது
அவனுறக்கத்திற்கு
வராத உறக்கத்திற்கு
இன்றைய விழிப்பிற்கும் எவ்வளவு வேறுபாடு!
புயல் ஓய்ந்து விட்டதை உணர்த்தியது
பொலிவு ததும்பிய முகம்
அரண்மனையே அகிலமாய் இருந்தவன்
அகிலத்தையே தன் அரண்மனையாக்கிக்கொள்ள
தீர்மானித்து விட்டான்
தன்மேல் விழுந்து கிடந்த
மகனின் பிஞ்சுக் காலை
மெல்ல நகர்த்தி விட்டு எழுந்தவன்
மெத்தென்ற இருட்டுக்குள்ளிருந்து
வெளிப்பட்டான்.

பொலிவு ததும்பிய அவன் முகத்தில்
இப்போது கருமை படர்ந்திருக்கிறது
ஒளியைத் தின்று நகைக்கிறது இருள்
இருளை வெறித்துக் கொண்டிருக்கின்றன
அவன் விழிகள்

புறக்காட்சிகளின் ஓர்மையற்று
வெறித்திருக்கும் கண்மணிகளின்
உயிர்ப்பற்ற தன்மை சில்லிட வைக்கிறது.

– சக்தி அருளானந்தம் –

Leave A Reply

Your email address will not be published.