கறுப்பு மனிதன் மகன்
லிஸியை விடவும் என் அன்னை
வெள்ளையாயிருந்தாள்
உறங்கும் கண்ணீர் ஒளிரும்
நீலக்கண்கள் அவளுடையாள்
வெட்கம், அச்சம், மகிழ்ச்சி மிகுந்தால்
மாதுளை என மலர்வாள்
துன்பக் கனவுகள் படரும்
அவள் நெற்றியை
காற்றில்
பொன் நிறக்கூந்தல் மூடி நிற்கும்
என் தந்தையோ
என்னை விடக்கறுப்பன்
இருந்தாலும் இவர் உறவை
புனிதம் என்னும் திருச்சபை
இதற்கெல்லாம் முழுமுரணாய்
அவள்
வெள்ளை நிற மென்முலையில்
பொன்னும் கபிலமும் கலந்த
சோளம் போல்,
நம் தேசச் சூரியன் போல்,
ஒரு குழந்தை,
அநாதையான நான்,
இளமை வேகத்தில்
லிஸியைக் காதலித்தேன்
ஆனால்,
எனது விருப்பம் கேட்ட உடனே
அவளின் முகம் வெளிறும்
கறுப்பன் மகனென்றால்
பயங்கரம் தானே!
– ஒஸ்வால்ட் டறன்ற் –
தமிழில் – என். சண்முகலிங்கன்