தமிழ் ஹை கூ ஆயிரம்
கூடையைக் கனக்க
கனக்கச் சுமந்து சென்றார்கள்
உள்ளே இந்த தேசம்.
ஆயூள் முழுவதும் அந்த
ஏழைக்காகவே வாழ்ந்திருந்தது
இதயம்.
மணமகளின் அங்கக்குறை
நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதே!
தங்கம்.
அடைபட்ட கைதிகளுக்கு
அவ்வப்போது மரண தண்டனை
தீக்குச்சிகள்.
பஸ் விபத்தில் மிஞ்சியது
ஓருயிர் மட்டும் தான்!
புத்தகம்.
ஆயிரத்துக்கு முயன்று நூறு
அதிகமாகக் கிடைத்து விட்டது
இப்போ இலக்கு இரண்டாயிரம்.
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டி விட்டு ஓலமிடுவது
நீர்வீழ்ச்சி.
சில்லறை விலையில்
சின்னச் சின்ன சவப்பெட்டிகள்
சிகரெட் பாக்கட்டுகள்.
தோலைச் சுவைத்து
கோலம் போட்டு வளர்ந்தது
தேமல்.
கோடி கோடி வார்த்தைகள்
நாவுமில்லை இதழ்களுமில்லை
உன்னிரண்டு கண்கள்!