எரிக்க முடியாத நூலகம் ஆவணப்படுத்த உதவுங்கள்

எண்ணிம நுட்பங்கள் மூலம் எம் சமூகங்களை ஆவணப்படுத்தி இணையத்தளம் மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் பணியினை நூலக நிறுவனம் (Noolaham Foundation) 2005 முதல் மேற்கொண்டு வருகிறது. எமது சமூகத்தில் காணப்படும் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நினைவுமலர்கள், கோயில் மலர்கள், வரலாற்றுப் புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற எம் வரலாற்று ஆவணங்களை நூலக நிறுவனத்துடன் இணைந்து ஆவணப்படுத்த முன் வரவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆணவனப்படுத்திப் பாதுகாப்பதோடு உலகளவிய ரீதியில் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் ஈடுபட்டு வரும் (www.noolaham.org) ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்டு (GA 2390) தன்னார்வலர்களால் வழி நடத்தப்படும் நூலக நிறுவனம் ஈழத்தின் முதன்மை எண்ணி ஆவண நிறுவனமாக (Digital Archive) மிளிர்கின்றது. நூலக நிறுவனம் இதுவரை 28,000 க்கும் அதிகமான வெளியீடுகளை ஆவணப்படுத்தி உள்ளதோடும் ஏறத்தாழ 5,000 ஏட்டுச்சு வடிகளையும் பதியு செய்துள்ளது. தமிழின் முதலாவது ஆவண மாநாட்டினை 2013 இல் நடாத்தியுள்ளது. 2,700 க்கும் அதிகமான பெரியோர், ஆளுமைகளின் விபரங்களைப் பதிவவு செய்து ஈழத்தின் வாழ்க்கை வரலாற்று அகரமுதலியினை ஆரம்பித்துள்ளது. பாடசாலைகள், கோயில்கள், கிராம ஒன்றியங்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களால் வெளியிடப்படும் ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் என்பன எமது வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் அவை சரியான முறையில் ஆவணப்படுத்தப்படாமையினால்  காலவோட்டத்தில் அழிந்தும் அருமைத்தன்மை உணரப்படாமையும் இருப்பது கண்கூடு.

அறிவு வளங்களின் பகிர்தலும் பதிவு செய்யப்படுவதும் ஒரு சமூகத்தின் இருப்புக்கும் தொடர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும். இதனைக் கருத்திற் கொண்டே நூலக நிறுவனம் ஆவணப்படுத்தலை தனது முழுமூச்சாக கொண்டு செயற்படுகின்றது. அந்த வகையில் தங்கள் வீடுகளிலோ அல்லது உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுகளில் காணப்படும் நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நினைவுமலர்கள், கோயில் மலர்கள், வரலாற்றுப் புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற எம் வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்த முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆவணங்களைப் பதிவு செய்து விட்டுப் பத்திரமாக மீளத்தர முடியும். ஆவணப்பதிவின் இறுவட்டு (DVD) பிரதியொன்றும் தரப்படும். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் நேரடியாக வந்து ஆவணங்களைச் சேகரிக்க முடியும். மிக அரிய ஆவணங்களை அவை இருக்குமிடத்துக்குவந்து அங்கிருந்தே கூட ஆவணப்படுத்த முடியும். தொடர்புகளுக்கு 94212231292 முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 97,000 ஆவணங்கள் அழிந்தன. ஆனால் அதற்குப் பிற்பட்ட காலங்களில் அதைவிட அதிக ஆவணங்கள் அழிந்து கொண்டே இருக்கின்றன. ஆவணங்களது பெறுமதி உணரப்படாமையும் அக்கறையின்மையே காரணமாகும்.

எமது வரலாற்றினையும் பண்பாட்டினையும் எதிர்காலத்தினையும் பாதுகாத்துக் கொள்ள ஆவணப்படுத்தல் மிக அவசியமான தேவையாகும். எண்ணிம நுட்பங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது உலகின் எந்த மூலையிலிருந்தும் இலகுவாகவும் வேகமாகவும் எத்தனை பேர் வேண்டுமென்றாலும் பயன்படுத்துவதனைச் சாத்தியப்படுத்துகிறது. எமது அறிவு, அடையாளம், வரலாறு, பண்பாடு, மொழி பற்றிய தகவல்களை அடுத்துவரும் சந்ததிகளுக்கு வழங்குபவை ஆவணங்களே. இவை தொடர்ந்தும் அழியாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரது கடமையாகும். அறிவே தமிழரின் பலம்.
ஊர் கூடி ஆவணப்படுத்துவோம்.

கஜானி சச்சிதானந்தன்

Leave A Reply

Your email address will not be published.