“உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது… அதன்  நன்மையை உடனடியாக மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும்” – விஜித ஹேரத்

கொரோனா பற்றியும் கூறுகிறார்...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30% குறைந்துள்ளதன் நன்மையை இந்த நாட்டு மக்களின் நலனை உறுதி செய்யும் வகையில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

நேற்று (11) பெலவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்,

“29 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. உற்பத்தியின் அளவைக் குறைக்காது எண்ணெயின் விலையைக் குறைக்க மத்திய கிழக்கு நாடுகளும் ஒபெக்கும் முடிவு செய்துள்ளன. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 35- 36 டொலர் ஆகும். 65 முதல் 67 டொலராகக் காணப்பட்ட கச்சா எண்ணெயின் விலை தற்போது 50%  வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில் எண்ணெய் விலை வேகமாக குறைந்துள்ளது. அதன் நன்மையை மக்களுக்கு வழங்க முடியும் என்றபோதிலும் ,அரசாங்கத்தால் ஏன் அதை மக்களுக்கு வழங்க முடியாது?

எண்ணெய் விலையானது, இறக்குமதி செலவு, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவு   மற்றும் அரசாங்க வரிகளின் அளவு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இறக்குமதிக்கான விலை வெகுவாகக் குறைந்துள்ளது. அரசாங்க வரிகளும் செலவினங்களும் மாறாவிட்டாலும், எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்கான நிவாரணத்தை மக்களுக்கு எளிதில் அரசாங்கத்தால் தெரிவிக்க முடியும். தற்போது, ​​137 ரூபாயாக காணப்படும் ஒரு லீட்டர் பெட்ரோல்  ரூ .100-105 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 90 வழங்க முடியும்.

எண்ணெய் விலை குறைக்கப்பட்டால், போக்குவரத்து செலவு குறைக்கப்படும். பொருட்கள், பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணம் போன்றன குறைக்கப்பட்டு பணவீக்கமும் குறைக்கப்படும். எண்ணெய் விலைகளைக் குறைப்பதன் மூலம் பொது மக்களின் மாதச் செலவினைக் குறைக்க முடியும்.

அமைச்சர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகக்  கூறினார். ஆனால், விலை குறைக்கப்படவில்லை. கதையாடும் அமைச்சர் ஒருவர் எண்ணெய் விலை குறைக்கப்பட்டால், மக்கள் தங்கள் வாகனங்களில் சுற்றித் திரிவார்கள் என்று கூறினார். இவர்போன்ற  பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளால்  மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. அரசாங்கம் செய்ய வேண்டியது எரிபொருள் விலையை குறைப்பதாகும்.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. விலைக்குறைப்பு மக்களின் பொருளாதார சிரமத்தை  எளிதாக்க நிவாரணம் அளிக்கும். அரசாங்கத்துக்கோ அல்லது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கோ எந்த நட்டமும் ஏற்படாமல் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியும். ஆனால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சமீபத்திய நட்டத்தை அரசாங்கம் இதன்மூலம் ஈடுசெய்யப் பார்ப்பது நியாயமற்றச் செயலாகும்.

அரசாங்கம் சமீபத்திய நட்டத்தை  ஈடுசெய்ய நினைத்தால் எரிபொருள் விலையை ரூ. 1,000 ஆகவாவது அதிகரிக்க வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதன் பலனை மக்களுக்கு வழங்குவதோடு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த சில நாட்களில் கட்டூநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவானது. கொரோனா வைரஸால்  இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்பியதே இதற்குக் காரணம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர்  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் . அவர் ஒரு சுற்றுலா வழிகாட்டி. அவர் இத்தாலியர்கள் குழுவுக்கு சேவை செய்தவர் ஆவார். இதன்போது  வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நாம் ஒரு நாடாக கொரோனா வைரஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசாங்கம்  உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது இருக்கிறது.

விமான நிலைய தகவல்களின்படி, 7 ஆம் திகதிக்குள் சீனாவிலிருந்து இரண்டு விமானங்கள் வந்தன. ஒரு விமானத்தில் 79 சீனர்களும், மற்றொரு விமானத்தில் 101 சீனர்களும் வருகைத் தந்துள்ளனர். 180 சீனர்ளும் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும்  உட்படுத்தப்படாமலேயே இவ்வாறு நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இது ஆபத்தான விடயமாகும். அதேபோன்று, ஏறக்குறைய 60 சீன நாட்டினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது 10 ஆம் திகதி  வந்த விமானத்தில் நாட்டிற்குள் நுழைந்தனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீன மக்களை பரிசோதிக்காது நாட்டிற்குள் நுழையவிடுதல் மிகவும் ஆபத்தான விடயமாகும். சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானியர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூட சீனர்களை தனிமைப்படுத்திப் பரிசோதிக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  மட்டக்களப்புக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால், அவர்களின் பாதுகாப்பு பற்றி உறுதியான தகவல் இல்லை. சீனர்களை தனிமைப்படுத்தாது தொடர்பில் இலங்கையர்களிடமிருந்து எதிர்ப்பும்  எழுந்துள்ளது.

தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நம் நாட்டுக்கு நிறைய அந்நிய செலாவணியை சம்பாதித்துத் தருகிறார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வருடமொன்றுக்கு 7,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய செலாவணியை அனுப்புகின்றனர்.

இத்தாலியில் மட்டும் சுமார் 150,000 இலங்கையர்கள் வாழ்கின்றனர். சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கிய இலங்கையர்கள் நாடு திரும்பும்போது எவ்வாறு வரவேட்பது? ஒருநாள் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என்று அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரியும். இத்தகைய விழிப்புணர்வு இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு போக்குவரத்து மற்றும் பிற வசதிகளை வழங்க ஒரு திட்டத்தை உருவாக்க முடியும். ஆனால், அரசாங்கத்திற்கு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சிலர் இலங்கைக்கு வருவதற்கு ஒன்பது மணி நேரம் ஆகிறது.

அவர்கள் விமான நிலையத்தில் மேலும் எட்டு மணி நேரத்தை செலவிடுகிறார்கள். வருபவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது. அதில்  உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கு ரூ. 7,500 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் போத்தல்களை விலைக்கு வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியை அனுப்பும் இலங்கையர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளபோது அரசாங்கம் இவ்வாறு நடத்துவது சரியா? வசதிகள்  மற்றும் தண்ணீர் போத்தல்களுக்குக் கூட கட்டணம் வசூலிப்பது நியாயமானதா? அவர்களை வரிசையில் வரச்செய்து இவ்வாறு வழங்குவது முறையா?

துண்டுப்பிரசுரத்தில் பணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் எவரிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ராணுவத் தளபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் இராணுவத் தளபதி அத்தகைய அறிக்கையை எவ்வாறு வழங்க முடியும்? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது ஒரு இராணுவ அரசு அல்ல. அமைச்சர் ஒருவர் அத்தகைய பொறுப்பான அறிக்கையை வழங்கியிருக்க முடியும். பாதை விநியோகிக்கப்பட்டதா? வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரம் முறையற்றதா? அது தவறானது என்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

எனவே, இது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் இந்த அலட்சியத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இதுதான்  அரசாங்கத்தின் ஏற்பாடு என்று  கூறுகிறோம். நீங்கள் அதை தெரிந்துக்கொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள குடும்பங்கள் தங்களது வெளிநாட்டு உறவுகளை எண்ணி துக்கப்படுகின்றனர். பயப்படுகின்றனர். இத்தகைய தருணத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது சரியா?

கொரோனா வைரஸ் தொடர்பாக எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எதிர்காலத்தில் உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நம் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் காரணத்தால் அதை நாம் நன்றாகவே உணர முடியும். நமது நாடு சுயாதீனமாக இயங்கவில்லை. நமது  நாட்டின் உற்பத்தி சரிந்துவிட்டது.

நமது உணவில் பெரும்பாலானவை வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் தேசிய அளவில் பேரழிவு ஏற்படக்கூடும். எனவே, அரசாங்கம் இப்போதே அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கட்சி, நிறம், இன, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் பொதுவான தேசிய தலையீடு தற்போது இலங்கைக்குத் தேவை. நாங்கள் ஒரு கட்சியென்ற அடிப்படையில் செயற்பட தயாராக உள்ளோம். அரசாங்கம் இதற்கு முதலில் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும். ” என்று குறிப்பிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.