கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா?

நெருங்கி வருகிறது பொதுத் தேர்தல்! மறுபடியும் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் களத்தில் குதித்துவிட்டார்கள். நாடாளுமன்றில் ஊமை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் வார்த்தைகளால் விளையாடுகிறார்கள்.

மார்ச் 02 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது. இம்மக்களுடைய எதிர்ப்பார்ப்பு எதிர்வரும் தேர்தலின் மீதுமட்டுமல்ல! கடந்து வந்த 71 வருடகால அரசியற் பாதையின் மீதும் இருந்துள்ளது. ஆனால், அம்மக்களது எதிர்ப்பார்ப்பு கனவுகள் அனைத்தும் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அதிகாரத்திற்கும், சமூகத்தின் முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கும் வருபவர்களால் கலைக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. இத்தனைக் காலமும் மக்கள் வாக்களித்து வாக்களித்து வெறும் ஏமாற்றத்தையே பெற்றுக்கொண்டவர்களாகிவிட்டனர்.

தேர்தல் காலமென்பது, முதலாளித்துவ அடிவருடல் அரசியற் கலாசாரத்தைக் கொண்டவர்களுக்கு நல்ல தீனியாக அமைந்துவிடுகிறது. அவர்கள் தனக்கான கதிரையைக் கைப்பற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்திருப்பதை கால ஓட்டத்தில் தொடர்ந்து எம்மால் காண முடிகிறது.

இம்முறைத் தேர்தலிலும் இன, மத, சாதி துவேசத்தின் மூலம் மக்களைக் கூறுபோட்டு வாக்குகளை திருட, மாறி மாறி வந்த அதிகாரக் கும்பல் தயாராகவே உள்ளது. அதுமட்டுமல்லாது! இனத்துவத் தலைமைகளும் எதற்கும் சளைக்காதவர்களாய் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் மத்தியில் துவேசத்தை விதைத்து இலாபக் கதிரை அறுவடை செய்து அனுபவித்து வந்தமையே தொடர் கதையாக உள்ளது.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், தமக்கான பலத்தை தாம் நிரூபிக்க வேண்டும் என்றும் வெறும் வார்த்தைகளால் கதையளந்து நாடாளுமன்றம் சென்றவர்கள் நீலக் கட்சியின் பக்கமாகவோ அல்லது பச்சை கட்சியின் பக்கமாகவோ சாய்ந்து கொண்டு, வாக்களித்த மக்களை ஏமாற்றியுள்ளமையும் இங்கு கண்கூடு.

இதுவரை பாராளுமன்றில் கள்வர்களும், மோசடியாளர்களும், ஊழல்வாதிகளும், போதைப்பொருள் விற்பனையாளர்களும், இனவாதிகளும், மதவாதிகளும், மேட்டுக்குடி அதிகாரம் கொண்டவர்களும் நிறைந்துக் காணப்பட்டனர். இடைநடுவே ஆங்காங்கு மக்களுக்கான செயற்பாட்டாளர்களும் தோன்றி மறைந்துள்ளனர்.

அந்தவகையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் மிக முக்கியமானதாகும். கோட்டாபய அரசாங்கம் ²⁄3 பலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. தன்பக்கம் சட்டத்தையும், அதிகாரத்தையும் வளைக்கவும் மெதமுலன வளவுவ செயற்படுகிறது. அதற்கு ஆதரவாக மேற்குறிப்பிட்ட கும்பல் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்னொரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி வெடித்து சிதறிப் போயுள்ளது. ரணில் – சஜித் யுத்தம் முற்றிப் போயுள்ளது. கடந்த காலம் மக்கள் இவர்களிடம் அரசாங்கத்தைக் கையளித்து சில நாட்களிலேயே இக்கும்பல் ”தாம் மகா திருடர்கள்” என்று காட்டிவிட்டனர். தொழிலாளர்களுடைய E .P.F  மற்றும் E .T .F  இல் கூட இவர்கள் கைவைத்துவிட்டனர்.

இவ்விரு கும்பலும் நாடாளுமன்றில் ஒவ்வொரு செங்கல்களாக கழற்றி விற்கக் கூடியவர்களே! இவர்களே நாட்டை நாசமாக்கினர். நாட்டு மக்களை கூறுபோட்டனர். ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகு வைத்தனர். தாங்கமுடியாத கடன் சுமையை, பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது ஏற்றினர். இன்று கொரோனாவிடம் இருந்தும் நாட்டைக் காக்க தவறுகின்றனர்.

இதனால் முறையான கொள்கை திட்டங்கள் எதுவுமின்றி முழுநாடே ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது. இளம் சந்ததியினர் திக்கற்றவர்களாகி விட்டனர். ஒரு வரியில் சொல்வதென்றால், இதுவரை இக்கும்பல் இலங்கைத் தாயைக் கற்பளித்து, சித்திரவதை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக கொலைசெய்து கொண்டிருக்கின்றது.

இவர்களிடமிருந்து தாய் நாட்டைக் காப்பாற்றுவதற்கான தருணமே எம்முன் பொதுத் தேர்தல் ரூபத்தில் வந்துள்ளது. இவர்களால் மழுங்கடிக்கப்பட்ட மூளைகளுக்கு சிந்திப்பதற்கான காலம் வந்துவிட்டது.

இலங்கைக்கு இப்பொழுது ஒரு மாற்றம் தேவை! அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த எல்லா இன மக்களும் தேசிய ரீதியாக திரள்வதன் மூலமும், அதனை மக்கள் சக்தியாக உருவாக்குவதன் மூலமுமே சாதிக்க இயலும்.

சதீஸ் செல்வராஜ்

Leave A Reply

Your email address will not be published.