கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சில கோரிக்கைகள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக (குணமடைந்த சீனப் பெண் உட்பட) உயர்ந்திருக்கின்றதனால், உடனடியாக நாட்டில் அவசர நிலையை அறிவித்து, பொதுத் தேர்தலை பிற்போடும்படி இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடமும், தேர்தல் ஆணைக்குழுவிடமும் கோருகின்றது.

நிலைமை இன்னும் மோசமடைந்து, நாடு முழுவதும் பரவியதன் பின்னர் அவசர நிலையை அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் பலனில்லை என்றும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தில் அந்நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸினால் (COVID-19) பாதிக்கப்பட்டோர் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட நாடுகள், ஆரம்பத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததனால், மோசமான நிலைக்கு அந்நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன. எனவே, இலங்கையும் அந்நிலைக்கு உட்பட முன்னர் உடனடியாக அவசர நிலையை அறிவித்து பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும் என்று இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இது தேர்தல் காலம் என்பதால் அதிகமானோர் தேர்தல் குறித்து கவனம் செலுத்துவதனால், இந்நோய் குறித்து கவனம் செலுத்துவது குறைவு. தேர்தல் காலத்தில் பல்வேறு வகையில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எனவே, தேர்தலை பிற்போடுவது இந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என்று இச்சங்கம் தெரிவிக்கிறது.

தெரிவுசெய்யப்பட்ட சில நாடுகளிலிருந்து வரும் நபர்களை மட்டும் தற்போது தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அனைத்து நாடுகளிலிருந்து வரும் நபர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, கடந்த மூன்று வாரங்களுக்குள் தனிமைப்படுத்தப்படாமல் இலங்கைக்குள் வருகை தந்த அனைவரையும், அவர்களுக்கு நெருங்கியவர்களையும் பரிசோதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.

குறிப்பாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் அதிகமான அக்கறையை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும், இந்நோய் பரவினால் அதற்கு முகம் கொடுப்பதற்காக வைத்தியசாலைகளில் உரிய வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் இச்சங்கம் தெரிவிக்கின்றது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இச்சங்கம் வலியுறுத்துகின்றது.

கடந்த சில வாரங்களில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தலின்றி இருந்தவர்கள், தன்னார்வமாக முன்வந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் சென்று உரிய விடயங்களை செய்துகொள்ளும்படியும், பொது மக்கள் அதிகளவில் நடமாடுகின்ற இடங்களுக்குச் செல்லாமல் நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகூடிய ஒத்துழைப்பை வழங்குமாறும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொது மக்களிடம் கோருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.