கொரோனா அச்சம்: டெல்லியில் 50 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை: முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், டெல்லியில் மதக் கூட்டம், அரசியல் கட்சிகள் கூட்டம், போராட்டம் ஆகியவற்றில் 50 பேருக்கு மேல் கூட வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக், ஜாமியா மிலியா ஆகிய பகுதிகளில் மக்கள் 90 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் கேஜ்ரிவாலின் இந்த அறிவிப்பால் அந்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள், தாங்கள் முகக் கவசம், கைகளைச் சுத்தம் செய்யும் திரவம் பயன்படுத்திக் கொள்வோம். கரோனாவைக் கண்டு அச்சப்படமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர்  கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும், விடுமுறை அறிவித்தது. மேலும், அனைத்து விளையாட்டுப்போட்டிகளையும் நடத்தத் தடை விதித்து திரையரங்குகளை 31-தேதி வரை மூட உத்தரவிட்டது.

(தி ஹிந்து தமிழில் பெறப்பட்ட தகவல்)

Leave A Reply

Your email address will not be published.