உலகம் முழுவது கொரோனாவின் வீரியம் அதிகரிப்பு

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக  6,065 பேர் இறந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 3,085 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 162,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமேரிக்கா: கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, அமெரிக்காவில் 29 பள்ளிகளை மூட அமெரிக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் நிலைமைகளை பொறுத்து இது மாறுபடலாம் என்றும் அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா, அரிசோனா, புளோரிடா, லூசியானா, மிச்சிகன், மிசிசிப்பி, மொன்டானா, வர்ஜீனியா, வாஷிங்டன், ஓஹியோ உள்ளிட்ட 29 மாநிலங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கலிபோர்னியா மாநில அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெரும்பாலான இடங்களை மூட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அனைத்து கிளப்புகள், உணவகங்கள் மற்றும் மதுபான கடைகள் எதிர்வரும் மார்ச் 31ம் திகதிவரை மூடப்படுகிறது.

இதுவரையில் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலால் மரணித்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 ஆகவும், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,747 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

இதன்படி,கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இத்தாலி ஆகும். தனிமையை போக்க இத்தாலியில் பெண்கள் இணையம் மூலம் யோகா பயில தொடங்கி உள்ளனர்.

பார்சிலோனா அரங்கை  வடிவமைத்தவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

இத்தாலியின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான விட்டோரியோ கிரிகோட்டி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தார்.

1992ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற பார்சிலோனாவின் விளையாட்டு மைதானத்தையும், மிலனில் உள்ள ஓபரா ஸ்டேடியத்தையும், 1990 கால்பந்து உலகக் கோப்பை இடம்பெற்ற மராசி ஸ்டேடியத்தையும் வடிவமைத்த உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இவராவார்.

இவர் உயிரிழக்கும் போது 92 வயதை கடந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக மாறி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறையாகும்.

இதனால்,  மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மனியானது பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட திட்டமிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.