அழியும் பச்சை தேசத்தை மீட்டிடுவோம்…

இரா.யோகேசன்  (கினிகத்தேனை)

நாடு பல்வேறு சவால்களை சந்திக்கின்றது. அதில் வரட்சி ஒன்றாகும். இவ் வரட்சி நிலை மலையகத்திலும் தொடர்கின்றது. வரட்சி நிலையோடு மலையகத்தில் தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதனால் பசுமையான புற்தரைகள், காடுகள், அதன் தன்மையை இழக்க மறுபுறுத்தில் பல்வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்திச்செல்கின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

மலையகம் என்பது மலைப்பாங்கான பசுமை நிறைந்த பச்சை பசேலென காணப்படும் ஒரு பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் இயற்கையான காடுகள், புல்வெளிகள், பற்றைக்காடுகள், பைனஸ் மரக்காடுகள்,  தேயிலை செடிகள் என்பன மலையகத்தை இயற்கையோடு அழகு செய்கின்றது.

பொதுவாக மலையகத்தில் மார்கழி என்றாலே பனி பொழியும். இதன் போது கடுமையான வெப்ப நிலையான காலநிலை நிலவும். இது தொடச்சியாக தை வரை தொடரும். இது மலையகத்தில் வழமையாக நிலவும் காலநிலையாகும். இதன் போது இப்பிரதேசத்தில் கடுமையா உஷ்னம் நிலவும் இதனை சூட்சமமாக பயன்படுத்திக்கொள்ளும் இனந்தெரியாத நபர்கள் இயற்கையான காடுகள், புல்வெளிகள், பற்றைக்காடுகள், பைனஸ் மரக்காடுகள்,  தேயிலை செடிகள் என்பவற்றுக்கு தீயை மூட்டுகின்றனர். இதன் காரணமாக அவை எரிந்து நாசமடைந்து விடுகின்றன.

அத்துடன் இயற்கையான காடுகள், புல்வெளிகள், பற்றைக்காடுகள் போன்றவற்றில் வாழும் உயிரினங்கள் தீ வைக்கும் சம்பவங்களினால் அழிந்தும் போகின்றன. அது மாத்திரரமன்றி இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது. குறிப்பாக மலைபிரதேசத்தில் இருந்தே மக்கள் தமக்கான குடிநீரை பெற்றுக்கொள்ளுகின்றனர். அவ்வாறு மலை பிரதேசத்தின் நீரை கொண்டு வரும் குழாய்களும் தீ வைக்கும் சம்பவங்களினால் எரிந்து நாசமடைவதால் மக்களுடைய நீர் விநியோகமும் தடைப்படுகின்றது.

இருப்பினும் இப்படியான காலநிலையில் மனிதனது செயற்பாடுகள் காரணமாக வழமையான காலநிலை செயற்பாட்டி மீது ஒரு தாக்கத்தையம் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மனிதர்களது இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளே இப்படியான தாக்கங்கள் என்றும் கூறப்படுகின்றது. இதனையே உலகலாவிய ரீதியல் காலநிலை மாற்றங்கள் என்றும் அது தொடர்பான மாநாடுகளும் வல்லரசுகளால் பேசப்பட்டும் கொண்டிருக்கின்றது.

என்று மனிதன் இயற்கையை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர நினைத்தானோ அன்றிலிருந்து இயற்கையான செயற்பாடுகள் மீதும் ஒரு தாக்கத்தை செலுத்தி வருவதையு ம் அவதானிக்க முடிகின்றது.

இப்படியான இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் உலகலாவிய ரீதியில் மட்டுமல்ல இலங்கையின் மலையகத்திலும் அதிகரித்து செல்கின்றது. இது கூட காலநிலையில் மாற்றத்திற்கான காரணங்களாக இருக்கலாம் என்பது சூழலியலாளர்களின் கருத்தாகிவிருக்கின்றது.

குறிப்பாக மலையகத்தில் தை அதன் பின் வரும் மாசி மாதத்தில் முழுமையான மழை கிடைத்துவிடும். இருப்பினும் தற்போதய நிலையில் மலையகத்தில் வரட்சிதான் நீடிக்கின்றது. ஒரு சில வருடங்களில் தை மாதத்தில் ஒருளவு மழை கிடைக்கும். பின் மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் ஒரு முழுமையான மழை கிடைப்பது வழமையான செயற்பாடாகவிருக்கம்.
இருப்பினும் இந்த இயற்கையான செயற்பாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக தற்போது ஒரளவாவது மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கரு முகில்கள் சூழ்ந்து காணப்படுகின்றது. மழை கிடைப்பது அறிதாகவே இருக்கின்றது. அவ்வாறு மழை பெய்தாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் மாத்திரமே பெய்கின்றது.

மலையகத்தில் பண்பாடு ரீதியில் ஒரு விஷேடம் ஒன்று காணப்படுகின்றது. அதில் மாசி மாதம் காமன் பண்டிகை இடம்பெற்று தொடர்ந்து வரும் காலத்தில் மாரியம்மனுக்கான திருவிழா இடம்பெறும். தற்போது ஒரு சில தோட்டங்களில் திருவிழா இடம்பெற்றும் முடிந்துவிட்டதாகிவிட்டதாயிற்று. ஆனால், இன்னும் மழை கிடைக்கவில்லை. மாரியம்மன் என்ற தெய்வத்திற்காக எடுக்கப்படும் திருவிழாவானது மழை வேண்டி எடுக்கப்படும் திருவிழாவாகும்.

மலையக மக்களது ஒரு நம்பிக்கை திருவிழாவாகம். இக் காலத்தில் எப்படியோ மழை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையிலே திருவிழாவையும் மிக சிறப்பாக கொண்டாடுவர். ஆனால், அந்த நம்பிக்கையில் கூட இன்னும் மழை கிடைக்கவில்லை என்பது இம்மக்களின் ஒரு ஏமாற்றமாகும்.

இவர்கள் நம்பியிருக்கம் ஒரு தொழில் தேயிலை தொழிலாகும். இந்த தேயிலை செடிகளுக்கு நீரும் அவசியமானது. தற்போது பல தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகி செல்கின்றன. இதனால் பெண் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது குறைந்து சென்றுவிடும். அது இவர்களது பொருளாதாரத்தை ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே, காடுகள் எமது நீர் வளத்தை தருகின்றது. அது மாத்திரமன்றி வரட்சி ஏற்படாமலும் தடுக்கின்றது என்பதை கருத்திற்கொண்டு இயற்கையான காடுகள், புல்வெளிகள், பற்றைக்காடுகள்,  தேயிலை செடிகள் ஆகியவவற்றை பாதுகாப்பதற்கு முன்வருவோம். இதுவே எமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் அத்திபாரமாக திகழ்கின்றது என்பதையும் உணர்ந்து செயல்படுவோம்.

Leave A Reply

Your email address will not be published.