கொரோனாவும் இலங்கையும்

“கொரோனா இஸ் நொட் ஜோக்கிங்” என்றதிலிருந்தே இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கின்றேன். இதுவரை இலங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் முதல் வாரத்தில் அதிகளவான கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை இருக்கிறது. முதலாவது வாரத்தில் கொரோனா நோயாளர்கள் மிகக் குறைவாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது வாரத்தில் அத்தொகை பலமடங்கு அதிகரித்திருந்தது. இன்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் பலமடங்கு எகிறியிருக்கும் நிலையில், கொத்து கொத்தான மரணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனோடு பார்க்கும் போது, இனியும் கொரோனா தொற்று பரவுதலுக்கு எதிராக மிகச் சரியான தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தினை இலங்கை முன்னெடுக்க தாமதிக்குமாயின், ஏற்படப்போகும் விளைவு மிகப் பாரதூரமானதாக அமையும்.

கொரோனா கோவிட் – 19 வைரஸ் பற்றியும், அதற்கு எதிராக ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றியும் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் பிற நாடுகளும், சுகாதார அமைப்புகளும் அனுபவித்தினூடாகவும் , ஆய்வினூடாகவும் விபரமாகவே விளக்கியுள்ளன. ஆனால், அவைகள் இலங்கையில் கடைபிடிக்கப் படுகின்றனவா?  என்பது பற்றி வேறாக ஆராய வேண்டியுள்ளது இந்த ஆபத்தான தருணத்தில்.

வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர்கள் மீள தாய்நாடு திரும்பியவுடன் செயற்பட்டவிதம் முறையானதா?

சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஈரான் உட்பட 153 நாடுகளுக்கும் மேல் கோரோனோ வைரஸ் பரவி பல நாடுகளில் நரவேட்டையாடிவருகிற நேரத்தில், உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாட்டில் வசித்துவந்த இலங்கையர்கள் பலர் மீளவும் நாடு திரும்பினர். இதன்போது அரசாங்கம் செயற்பட்ட முறையற்ற விதம் தொடர்பில் விமர்சிக்கப்பட்டு, கேள்விக்குட்படுத்தவும் பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் பலரது சுவாசக் குழாய்களை கோரோனா அறுத்தெறிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் கொஞ்சம் முனைப்புடன் விமான நிலையங்களில் வந்திறங்கும் பல பயணிகளை தனிமைப்படுத்தல் பரிசோதனையில் ஈடுபட வைத்தது.

ஆனால், ஏலவே இதற்கான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளப்படாத காலப்பகுதியில் பல இலங்கையர்கள் எந்தவித பரிசோதனையுமின்றி இலங்கைக்குள் புகுந்திருந்தனர். மார்ச் 01 முதல் மார்ச் 09 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 2000 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். அதில் 800 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் என அறியமுடிகிறது. விபரம் விபரீதமாய் போவதை அறிந்த அரசாங்கம் இன்று மதியம் 4.30 மணியோடு அப்பிரதேசத்திற்கு ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் ஒருசில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார். லண்டனில் இருந்து வந்த குறித்த நபர் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் உட்படாது தனது குடும்பத்தாருடன் குதூகலித்துள்ளார். பிரயாணங்களை மேற்கொண்டுள்ளார்.

அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகனிடமிருந்து 73 வயதான தகப்பனுக்கு கொரோனா தொற்றியிருந்தது. இவ்வாறான தனிமனித சுய கட்டுப்பாடுகள் இல்லாத தன்மையினாலும் கொரோனா தொற்று அதிகரித்துப்போயுள்ளது. நாட்டுக்குள் கொரோனா வருகைதந்த நுழைவாயிலை தற்போது அரசாங்கம் மூடியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தனிமைப்படுத்தல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படவேண்டும். அதேபோல், அனைவரது பாதுகாப்பு கருதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படாத நபர்களை அடையாளங் கண்டு பொறுப்பான பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.

கடவுளர்களைக் குறிவைக்கும் கொரோனா 

மதவாத அரசியலில் மூழ்கடிக்கப்பட்ட இலங்கை அதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு சுலபமா? அரசியல் சட்டத்தின் வாயில் ‘மதம்’ என்ற போதை ஊற்றப்பட்டபின் நாடு எப்படி தள்ளாடாமல் இருக்க முடியும்?

அதேபோல, மக்களுடைய சிந்தனையும் போக்கும் தள்ளாட்டம் கண்டுள்ளது. கொரோனா வருமுன் இருந்த மதவாதிகளின் அடாவடித்தனமும் பெருங்குரலும் கொரோனா இலங்கை எல்லைக்குள் புகுந்த பின்னர் கொஞ்சம் அடங்கியும் போயுள்ளது.

கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன குறிப்பிட்ட சனம் கொரோனா தாக்கத்தை ஒரு பொருட்டாக கணக்கெடுக்காத நிலையும் காணப்படுகிறது. இலங்கை இன்னும் தன்னை பவுத்த நாடாக காட்டுவதற்காக பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்கிறது. “நாங்கள் கொரோனாவுக்கு பயந்து சிறிபாதவை மூடமுடியாது” என்று  தேரர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையும் காணக்கிடைத்தது.

தென்கொரிய தேவாலயத்தில் ஒரே நேரத்தில் கொரோனா பரவியதையும் நான் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகிறேன். சிங்கப்பூர் அனைத்து சமய வழிபாடுகளையும் ஆரம்பத்திலேயே நிறுத்தியது. வரலாற்றில் மூடப்படாத சீரடி சாயிபாபா கோவில் மூடப்பட்டுவிட்டது.

ஆனால், மதம் மக்கள் மீது வைத்த கண்ணை எடுத்ததாகத் தெரியவில்லை. மக்களும் வசியப்பட்டுப்போய் கிடக்கிறார்கள். “கடவுள் இல்லனு சொல்லல. இருந்தா நல்ல இருக்கும்னுதான் சொல்லுறேன்.” இவ்விடத்தில் தமிழ் சினிமா டையலகையும் பதிவு செய்கிறேன்.  ஆனாலும், விஞ்ஞானத்தின் பின்னால் மதம் மற்றும் கடவுளர்கள் வளம் வருவதே இன்றைய எதார்த்த சூழல். “ஏமாற்றுகாரர்களின் பேச்சைக்கேட்டு ஏமாற வேண்டாம்.” இதற்கு மேல் என்ன சொல்ல?

வெள்ளம் வரும் முன் அணையைக் கட்டியதா இலங்கை அரசு ?

“பலமான அணையைக் கட்ட முடியாதவர்களே இலங்கை அரசாங்கம்” என்று ஆர்ப்பரித்து வந்த வெள்ளம் காட்டிவிட்டது. நேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டு நலன் பற்றி எதுவுமே இல்லை என்பது போல ஜே.வி.பி இன்று ஊடக சந்திப்பில் கூறியதோடு, தமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை கோரோனா விவகாரத்துக்கு வழங்குவதாகவும் அறிவித்தது.

கொரோனாவை எதிர்த்து இலங்கையில் இராணுவப்படை துப்பாக்கி தூக்கி நிற்கிறது. அமெரிக்காவே ஆடிப்போய் இருக்கும் இநேரத்தில் இவர்கள் இராணுவ பலத்தைக் காட்டுகிறார்களாம். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி “மக்களே எமக்கு ²/3 அதிகாரத்தை தாருங்கள்.” என்கிறார். அரசாங்கம் இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த முயல்கிறது.

கோட்டாபய தோற்றுப்போயுள்ளார். இந்த நேரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் செயலாற்றுவதே சிறந்தது.

இறுதியாக,

தலைக்கு வந்த கொரோனாவுக்கு தலையைக் கொடுக்காது தலைப்பாகையோடு வழியனுப்பவே அரசாங்கம் செயற்பட வேண்டும். உலக அரங்கிலேயே மக்களுக்கு சேவையாற்றுவதாக பொய்யிக்கு நடித்தவர்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள். போலி மருத்துவ மாஃபியா பதுங்கிவிட்டது. கடவுளர்கள் காணாமலாகிவிட்டார்கள். எதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசாங்கம் மக்களுக்கு செயலாற்ற வேண்டும். மக்களும் அதற்கேற்றாற்போல் நடக்க வேண்டும். இந்த நேரத்தில் கொரோனா வைரஸிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதே பிறருக்கு செய்யும் பேருதவியாகும்.

சதீஸ் செல்வராஜ் 

Leave A Reply

Your email address will not be published.