கருக்கலைப்பு இனி குற்றமல்ல: நியூசிலாந்தில் மசோதா நிறைவேற்றம்

கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு “மிகவும் அபாயகரமான பிரச்சனை” இருந்தால், இருவேறு மருத்துவர்களின் ஒப்புதலுக்கு பிறகே நியூசிலாந்தில் கருக்கலைப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது.

நியூசிலாந்தில் குற்றமாகக் கருதப்படும் ஒரே மருத்துவ முறையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருக்கலைப்பு விளங்கி வந்தது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், நியூசிலாந்து பெண்கள் எவ்வித இடையூறும் இல்லாமல், தக்க நேரத்தில் முடிவெடுக்க முடியுமென்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(பிபிசி தமிழ்)

Leave A Reply

Your email address will not be published.