உலகைக் காக்கும் ரட்சகர்களை வாழ்த்துதல் 

கொரோனா நுண்ணுயிர் நரவேட்டையாட, சீனாவில் அடுத்தடுத்தாய் பல தலைகள் வீழ தொடங்கின. சீனதேசம் ஸ்தம்பிதமடைந்தது. வுஹான் முடங்கியது. ஆனாலும், சீனா தொடர்ந்தும் மனந்தளராதது போராடியது. அறிவியல் என்ற வைரக்கல்லை எடுத்து பட்டைத்தீட்டியது. விளைவு, சீனா பாரிய அழிவிலும் பல சாகஸங்களைப் புரிந்தது. அந்த சாகசங்கள் வெறும் கண்கட்டு வித்தைகளாகவல்லாமல் உயிர் காக்கும் சீனப் பெருஞ்சுவராய் ஆயின.

முழு உலகமே வரப்போகும் ஆபத்தை உணர்ந்தும், சில நாடுகள் உணராதது போல் நடந்துகொள்ள, மூச்சுக்குழாயைப் பிடித்து கொரோனா இறுக்கியவுடன் முழு உலகுக்கும் மூச்சு திணறியது. உலகம் துவண்டுபோனது. மரண பீதியில் ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே இழுத்துப் பூட்டிக்கொண்டது.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி ஐரோப்பாவுக்குள் நுழைந்து தாக்கிய கொரானாவின் வியூகத்தில் சிக்குண்ட பல நாடுகள் நிலைத்தடுமாறின. கண்முன்னே உடலில் இருந்து உயிர்பிரிவதைப் பார்த்து கண்ணீர் வடித்தன. இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எந்நேரமும் மரண ஓலம். ஈரானில் கொத்து கொத்தானச் சாவு. யுத்தம் ஒருபக்கம்! கொரோன மறுபக்கம்!

முதலாளித்துவம் முளைத்த இங்கிலாந்தும், ஏகாதிபத்தியத்திற்கு தலைமைத்தாங்கும் அமெரிக்காவும் கூட ஆட்டங்கண்டு உள்ளது. முதலாளிகளைக் காப்பாற்ற அவர்கள் வரைந்த வரைபில் பாட்டாளிகளைக் காப்பாற்ற வழியெதுவும் இல்லாததே அதற்கு காரணம்.

இத்தருணத்தில் உலகச் சனம் தாம் எவ்வித உதவியுமின்றி இறக்கப் போகின்றோம் என எண்ணியது. ஆனால், ஏகாதிபத்தியத்தால் எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்ட துகள்களிலிருந்து பீனிக்சுகளாய் ரட்சகக் கூட்டம் ஆங்காங்கே எழத்தொடங்கின. பிராணவாயு வந்து சுவாசப்பையை நிரப்பியதாய் ஓர் ஆனந்தம் உலக சனத்திற்கு. பாட்டாளிகளான மருத்துவர்கள், தாதிமார்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், சாரதிகள் என்று ஏராளமானோர் களமிறங்கினர் இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு. தமதுயிரை துச்சமெனக் கருதி களமிறங்கிய இவர்கள் சூப்பர் ஹீரோக்கள் தான்.

இதன்போது சோஷலிச கியூபா தனது மருத்துவர் படையை உலகுக்கு தானமாக தந்தது. சிலர் சோஷலிசத்திற்கு பதிலாக மனிதநேய கியூபா என்று குறிப்பிடுவது நல்லதென்பர். பிரிவினைவாதத்தைக் கடந்து சகமனிதனை நேசிக்கும் கட்டமைப்பு சோசலிசத்தில் உருவாக்கப்பட்டதால் கியூபா அது சோஷலிச கியூபாதான்.

இன்று முதலாளித்துவம் முடங்கிப்போனது. ஏகாதிபத்தியம் ஏமார்ந்துபோனது. கியூபாவின் விடுதலை நாயகர்களான அத்தனை கஸ்டரோக்களையும், அத்தனை சேகுவேராக்களையும், புரட்சிக்கு வித்திட்ட மகத்தானவர்களையும் வரலாறு இன்று விடுதலை செய்து மகிழ்கின்றது.

உலகைச் சூழ்ந்துள்ள ஆபத்து இன்னமும் அகலாத போதிலும், சோஷலிஸக் கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட மனிதநேய படைகளும், உலகின் முற்போக்கு சக்திகளும், பல நல்லுள்ளங்களும் வலிமையான ரட்சகர்களாய் கொரோனாவுக்கு எதிராகப் போராடுகின்றனர்.

முழு இந்தியாவுக்கும் முன்னுதாரணமாய் சிவப்பு கேரளம் எழுந்தது. ரஷ்ய தேசத்தில் சோசலிசம் விழுந்தாலும், அதன் ஆரம்பத்தில் எதிரொலி அங்கு தென்படாமலுமில்லை. இதுவரை வடகொரியா தன்னாட்டு மக்களை பாதுகாத்துக்கொண்டு விட்டது. கியூபாவும் சீனாவும் பலநூறு நாடுகளுக்கு உதவியளிக்கவும் சென்றுவிட்டன.

அதேபோல், இலங்கையிலும் செம்படைகள் எழும்பி மக்களுக்காய் செயலாற்றி வருகின்றன. முற்போக்கு சக்திகள் மும்முரமாய் செயலாற்றுகின்றன. பிரிவினை என்ற சட்டையை கழற்றி வீசி எறிந்துவிட்டு நல்ல மனிதர்கள் களமிறங்கி கொரோனாவுக்கு எதிராக போராடுகின்றனர்.

ஆனால், இவர்களின் அர்ப்பணிப்புகளை முதலாளித்துவ இலங்கை ஊடகங்கள் வெளியில் காட்டாது. அத்தனையையும் முழுங்கி ஏப்பம்விட்டு மௌனமாக இருந்துவிடும்.

ஆம்! சோஷலிசக்காரர்களின் மக்கள் விடுதலை முன்னணியின் செந்தாரகை நிவாரணப் படையணி மக்களுக்காக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் மக்கள் பிரதிநிதிகளின் ஒட்டுமொத்த ஊதியமும் கொரோனாவுக்கு எதிராக செயல்படுத்த ஒதுக்கியுள்ளனர்.

முற்போக்கு சக்தியான இளைஞர், யுவதிகளின் ”புதிய சிறகுகள்” அணி முகக்கவசம் முதற்கொண்டு, வைத்தியசாலைக்குத் தேவையான பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஆடைகள், உபகரணங்கள், உடன் முதலுதவிக்குத் தேவையான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல், நாடு முழுவதும் பல நல்ல உள்ளங்கள் தம்மாலான உதவிகளை பாரபட்சமின்றி செய்துகொண்டிருக்கின்றனர். இலங்கையர்கள் மனிதாபிமானம் கொண்டவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? ஆனால், இலங்கையின் அரசியல் முறை இம்மக்களை பிரித்தாட்கொண்டிருக்கிறது. கொரோனா விவகாரம் முடிய அவ்வரசியல் முறை மக்களைப் பிரிக்கும். “ஒற்றுமை” என்ற சங்கிலியை அறுத்தெறியும்.

இலங்கையில் எழுந்த இதுபோன்ற சக்திகள் அரசாங்கத்திற்கு துணைநிற்கின்றது. கூறப்போனால், இவர்கள் தனியொரு அரசாங்கமாகவே செயற்படுகின்றனர்.

ஊரடங்கு சட்டத்தால் மாத்திரம் அத்தனையும் சாதிக்க முடியுமென்றால், 6 மாத காலம் தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டதே அங்கு சமாதானத்தை பரிசாக அளிக்க முடிந்ததா?

அரசாங்கத்தின் இயலாமைகளை மறைக்க ஊரடங்கும் இராணுவ மயப்படுத்தலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நேரத்தில் ஊரடங்கு மிக அவசியமானதே. ரஷ்யத் தலைவர் புட்டீன் கூட ” ரஷிய மக்களே அனைவரும் வீட்டினுள் இருக்கத் தயாரா? அல்லது 5 வருடங்கள் சிறையிலிருக்கத் தயாரா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

ஆனால், இலங்கையில் சுகாதாரமும் மருத்துவ வசதியும், போக்குவரத்தும் பாதுகாப்பும், பொருளாதாரமும் மக்கள் வாழ்வும், வீட்டுத்திட்டமும் உரிமையும் போன்ற பல இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றனவே? இதனோடு இணைக்க வேண்டிய பல வரிசையிலும் அணிவகுக்கின்றனவே. இத்தனையும் கண்டுக்கொள்வது இங்கு நல்லதே.

இலங்கைக்குத் தேவை சிறந்த சமூகக் கட்டமைப்பு முறை. இப்போதிருக்கின்ற முறைக்கு பதிலாக மக்களுக்கான புதிய முறை. மக்களுடைய சமூக கட்டமைப்பு முறையென்றால் அது நிச்சயம் முதலாளித்துவ கட்டமைப்பு முறை கிடையாது.

அன்று!

நாமும் கியூபாவைப் போல், சீனாவைப் போல் மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்கி உலகுக்கு தானமாக வழங்க முடியும். இன்று இலங்கையைக் காக்க புறப்பட்டுள்ள ரட்சகர்களைப் போல உலகைக் காக்கும் பல ரட்சகர்களை உருவாக்க முடியும்.  உலகமே தனதென்று எண்ணும் மனிதநேயமிக்க மனிதன் அன்று சர்வதேசியவாதியாய் செயற்படுவான்.

எவ்வித பேதமுமின்றி கொரோனாவைத் தோற்கடித்து அழித்து, எதிர்காலத்திலும் எவ்வித பேதமுமற்ற மனித சமுதாயத்தை உருவாக்க இலங்கையராய் நாம் இன்று செயற்படுவோம்.

சதீஸ் செல்வராஜ்

 

Leave A Reply

Your email address will not be published.