அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியாது

பாராளுமன்றத்தை கூட்டுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டுமென  வலியுறுத்துகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத காலத்தினுள் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற நிலைமை இருந்தும் கூட நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையில்  அடுத்த மூன்று மாதங்களில் தேர்தலை நடத்த எந்த வாய்ப்பும் இல்லை. எனவே பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி  சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு  தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நாட்டின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என பிரதான அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் இது குறித்து தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்ற அறிவித்தல் ஒன்றினை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தது. குறிப்பாக  தேர்தல் நடத்தப்படும் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் திகதி என்பவற்றை அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தரவிற்கு நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

“தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் இறுதியில் கூட  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் இருப்பதாகவும் சுகாதார துறையினர் தெளிவாக அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, ஏற்கனவே கூறியதற்கு அமைய பாராளுமன்ற தேர்தலை மே மாத இறுதி வாரத்தில் நடத்த முடியாது இருப்பதாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மார்ச் மாதம் 2 ஆம் திகதியில் இருந்து அடுத்த மூன்றுமாத காலத்திற்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியாது எனவும் அவதானிக்க முடிகின்றது. எனவே  இது குறித்து தீர்மானம் ஒன்றினை எடுக்க ஜனாதிபதி சட்டமா அதிபரை நாடுவது முறையானதாக அமையும் “என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள  கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் பிரதி பிரதமருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் மேலதிக தெளிவை பெற்றுக்கொள்ள வினவியபோதே அவர் கூறுகையில்,

கொவிட்-19 என கூறப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று நாடு பாரிய நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து சிந்திக்க முடியாது. கடந்த மார்ச் மாதம்  2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போது அடுத்த மூன்றுமாத காலத்தினுள் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற நிலை இருந்த போதிலும் இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசியல் அமைப்பின் பிரகாரம் இம்மாதம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடியாகவேண்டும். ஏனெனில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத காலமே பாராளுமன்றம் செயற்படாது இருக்க முடியும். அப்படியாக இருப்பினும் கூட ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை எதிர்வரும் மே மாதம் 27 அல்லது 28 ஆம் திகதிகள் நடத்தியாக வேண்டும். அதற்குள் கொரோனா தொற்றுநோய் பிரச்சினைகள் முற்றாக நீங்குமா என்ற கேள்வி உள்ளது. சுகாதார அதிகாரிகளின் கருத்துக்கு அமைய அதற்கான சாத்தியம் இல்லையென்றே தெரிகின்றது.

ஆகவே, இது குறித்து ஜனாதிபதியை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். சட்டமா அதிபரிடம் இது குறித்த ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே வலியுறுத்தினோம். எனினும் இப்போது தேர்தல் நடத்தாது உள்ளமையானது அரசியல் அமைப்பின் 70 ஆம் சரத்துக்கு அமைய முரண்படுகின்றது. ஆகவே இது குறித்து சட்ட ரீதியான தீர்மானம் எடுக்க வேண்டும். இதில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என பல அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூட இந்த கோரிக்கை பிரதமர் மற்றும் அரசாங்கத்திடம் முன்வைத்ததாக அவதானிக்க முடிகின்றது. எவ்வாறு இருப்பினும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, ஒத்துவைக்க வேண்டுமா என்பது குறித்தெல்லாம் தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தீர்மானமும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரமும் எமக்கு இல்லை. ஆகவே ஜனாதிபதி சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதற்கான தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும், அவ்வாறு தீர்மானம் ஒன்றினை எடுப்பார் என நாம் நம்புகிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.