19 மாவட்டங்களுக்கான ஊரடங்குசட்டம் தற்காலிக தளர்வு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின்   ஊரடங்குச்சட்டம் மீள் அறிவித்தல் வரையில்  நடைமுறையில் இருக்கும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம்  உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று எட்டுமணிநேரம் தளர்க்கப்படுகின்றது. அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படும் காலத்தில் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றி மக்கள் செயற்படுங்கள் என அரசாங்கம் அறிவுறுத்துகின்றது.

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடளாவிய  ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்று திங்கட்கிழமை தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படுகின்றது. இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனையே 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படுகின்றது. இந்த கால எல்லைக்குள் மக்கள் மிகவும் கவனமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பொருட்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

சுகாதார அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

இதற்கு முன்னர் இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்ட கால எல்லைக்குள் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இடைவெளியை கடைப்பிடிக்காது கூட்டம் கூடிய பல சம்பவங்கள் இடம்பெற்றது. இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள சூழல் அச்சுறுத்தலாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் சுகாதாரத்துறையினர், ஒவ்வொரு தனி நபர்களுக்கும் இடையில் ஒரு மீட்ட இடைவெளியில் வரிசையில் நின்று அங்காடிகளிலும், பல்பொருள் சந்தைகளிலும், கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், முகக் கவசங்களை உரிய முறையில் அணிந்து அனைவரும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

வீடுகளுக்கான சேவைகள் இந்நிலையில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் கேட்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் கூட சகல மக்களுக்கும் அவ்வாறான சேவை கிடைக்கவில்லை என்ற முறைப்பாட்டை மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் விதத்தில் இன்று தொடக்கம் மேலதிக சேவைகளை அரச துறையினரை ஈடுபடுத்தி முன்னெடுக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரச மருந்தகங்கள் அனைத்தும் இன்றைய தினம் திறக்கப்படும்

இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதைப் போலவே நோயாளர்களின் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே இப்பிரச்சினையை நிவர்த்திசெய்யும் வகையில் இன்றைய தினம் சகல அரச மருந்தகங்களும் திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள அரச மருந்தகங்களை நாட முடியும் எனவும், மாற்று வழிமுறையாக தொலைபேசிகளில் தொடர்புகொண்டு வீடுகளுக்கு மருந்துகளை பெற்றுகொள்ளவும் முடியும் எனவும் கூறியுள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவுகள் இன்றுடன் முழுமையாக கொடுத்து முடிக்கப்படும்.
அதேபோல் கடந்த சில தினங்களாக ஓய்வூதிய கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் சகல ஓய்வூதியக்கார்களுக்கும் தமக்கான ஓய்வூதிய நிதி முழுமையாக கொடுத்து முடிக்கப்படும். இதில் நோய்வாய்ப்பட்டுள்ள ஓய்வூதியக்காரர்கள், அங்கவீனமுற்ற ஓய்வூதியக்காரர்களுக்கு முதலிடம் வழங்கப்படுவதுடன் ஏனைய ஓய்வூதியக்காரர்களுக்கும் தமக்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கிகள் திறக்கப்படும்.

அத்துடன் இன்றைய தினம் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்பட  வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக ஓய்வூதியக்காரர்கள் தமக்கான ஓய்வூதிய நிதியை பெற்றுக்கொள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளை நாடக்கொடிய இலகுதன்மைக்க்காகவே இந்த ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படுகின்றது. அதேபோல் தபால் சேவையாளர்களின் ஊடாகவும் ஓய்வூதிய நிதி உரிய நபர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும்.

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை

இன்றைய தினம் எட்டுமணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்டாலும் கூட ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து ஏனைய எந்தவொரு தேவைக்காகவும் எவரும் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது. அதனையும் மீறி எவரேனும் சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி அனுமதியையும் வழங்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.