ஊரடங்கு தளர்வு காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில்  சிரமம்  – அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு

காலவரையறையின்றி நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டு வருகின்ற ஊரடங்கு சட்டம் அவ்வப்போது தளர்க்கப்பட்டு மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய காலம் வழங்கப்படுகின்ற போதிலும் கூட அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாகாணங்கள் தவிர்ந்து ஏனைய 19 மாவட்டங்ககளில் நேற்று ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்ட நிலையில் மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். நேற்றைய தினம் எட்டு மணிநேரம் ஊரடங்கு சட்டம் தளர்வுக் காலம் வழங்கப்பட்டது. காலை ஆறு மணிக்கு இவ்வாறு வழங்கப்பட்ட தளர்வுகாலம் பிற்பகல் இரண்டு மணியுடன் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வந்தது. எனினும் இந்த கால எல்லைக்குள்  மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களின் நுகர்வு தேவைகளுக்காக கொள்வனவு செய்யும் பல பொருட்கள் தட்டுப்பாடு நிலவியதுடன் மருந்துகளுக்கும் பாரிய தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு.

குறிப்பாக பருப்பு, வெங்காயம், பலசரக்கு பொருட்கள், பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கு நாடுபூராகவும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களால் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

மருந்துகளும் கேள்வியே

அதேபோல், நேற்றைய தினம் நாட்டில் சகல பகுதிகளிலும் மருந்தகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் திறக்கப்படும் என அரசாங்கம் அறிவித்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் மருந்தகங்கள் முன்பாக மக்கள் கூட்டத்தை அவதானிக்க முடிந்தது. மக்கள் தமக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்ட போதிலும் கூட மருந்துவ பொருட்களிலும் தட்டுப்பாடே நிலவியது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

சுகாதார முறைமைகளை பின்பற்ற மக்கள் பழகிக்கொண்டுள்ளனர் என்பது நேற்றைய தினம் அதிகளவில் அவதானிக்க முடிந்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் பெரும்பாலான மக்கள் நேற்றைய தினம் தமக்கான இடைவெளிகளை உருவாக்கிக்கொண்டு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டமை அவதானிக்க முடிந்தது. எனினும் ஒரு சில பிரதேசங்களில் மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பன்றாது தமது செயற்பாடுகளில் ஈடுபட்டனர். எவ்வாறு இருப்பினும் தொற்றுநோய் அச்சுறுத்தல் நிலவுகின்ற காரணத்தினால் நாட்டில் சகல மக்களும் தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வழங்கிவருகின்ற அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வங்கிகள், தபால் நிலையங்கள் செயற்பாட்டில்

அதேபோல், ஓய்வூதியக் காரர்களுக்கு நேற்றைய தினத்தில் தமக்கான ஓய்வூதிய நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலையில் அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் செயற்பாட்டில் இருந்தது. இருசில கிளை வங்கிகள் மூடப்பட்டு இருந்த போதிலும் அரச வங்கிகளின் மூலமாக ஓய்வூதிய நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஓய்வூதியக்காரர்களுக்கான  நிதியை வீடுகளுக்கே கொண்டுசென்று சேர்க்கும் செயற்பாடுகள் தபால் நிலையங்களில் மூலமாக முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Leave A Reply

Your email address will not be published.