பட்டினிச்சாவை எதிர்கொள்கிற மக்களுக்கு அரசாங்கம் முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் – இரா.சந்திரசேகர்

” பட்டினிச் சாவுக்கு முகம்கொடுக்கின்ற நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு, உரிய நிவாரணங்களை உரிய வகையில் அவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.”  என்று மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (05) யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்,

” இந்த அரசாங்கம் தேர்தலை நோக்கமாகக் கொண்டே செயற்படுகிறது. கொரோனா பாதிப்பினூடாக தங்களது அரசியல் இருப்பை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்கின்ற நிலைமையில் இருந்தே அரசாங்கம் செயற்படுவதாகத் தெரிகிறது.

எமது நாடு சிறிய தீவு. காலம் தாமதிக்காமல் நாட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருக்குமாக இருந்தால், நாட்டிற்குள் கொரோனா வருவதைத் தடுத்திருக்கலாம்.

மார்ச் மாதம் முதல் பகுதியில் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டபோது, அதாவது மார்ச் 19 வரை அரசாங்கம் தேர்தலை நடத்துவது எப்படி? தேர்தலில் ²/3 பெரும்பானமையைப் பெறுவது எப்படி?  என்ற நிலையில் இருந்தார்களே தவிர, மக்களை பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.

இன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மார்ச் 13ம் திகதி, நாட்டை இழுத்து மூட அவசியம் இல்லை. நாட்டில் கொரோனா பாதிப்பு அவ்வளவு பாரதூரமாக இல்லை. நாம் தேர்தலை நடத்த வேண்டும் என்றார். அவர்  ²/3 பெறவேண்டும் என்ற நிலைபாட்டிலேயே இருந்தார்.

அதேபோன்று, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, இந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சிதறிப்போய் இருக்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ²/3 பெரும்பானமைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்து செயற்பட்டார்.

மகிந்த ராஜபக்ஷவின் அண்ணனும் தேர்தலை நடத்தும் மனநிலையிலேயே இருந்தார்.

சார்க் தலைவர்களுக்கிடையில் தொழிநுட்ப ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றப் பொழுது, கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தார். கொரோனாவுக்கெதிரான நடவடிக்கைகள் பற்றி பேசவில்லை.

இன்று மக்களுக்கு நிவாரணம் வழங்குகையில், அரசியற் செயற்பாடுகளும் தலையீடுமே இருக்கிறது. இது அரசியல் ரீதியிலான காவாலித்தனமே என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றோம்.

யுத்தத்தைத் தனியாக வென்றோம் என்று கூறுவதுபோல, கொரோனாவைத் தனியாகத் தேற்கடித்தோம் என்று கூறி வாக்குப் பிச்சைகள் கேட்க அரசாங்கம் தயாராகி வருவதை அவதானிக்க முடிகிறது.

தற்போது நாட்டுக்கு தேசிய வேலைத்திட்டமொன்றுத் தேவை. அனைத்துக் கட்சிகள், சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் அனைவரையும் இணைத்துக்கொண்ட முழு நாட்டுக்கும் தேவையான வேலைத்திட்டம் தேவை. ” என்று அவர் தெரிவித்தார்.

இதன் போது, கோட்டாபய அரசாங்கம் தேர்தல் நடத்த முனைந்த வேளையில் தேர்தல் ஆணையகம் தேர்தலைப் பிற்போட்டதற்கு நன்றி தெரிவித்தார். மக்கள் மீது தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருக்கின்ற அக்கறை கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இல்லையெனவும் அவர் சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.