கொரோனா வைரஸ் தொற்றுநோயின்   இரண்டாம் சுற்றுக்கு அதிக வாய்ப்புகள்

சமூக பாதுகாப்பை அடுத்த ஆறுமாத காலத்திற்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கின்றனர்  சுகாதார மருத்துவ அதிகாரிகள்.

நாட்டில் “கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதாக எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கும் இலங்கையின் சுகாதார மருத்துவ அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் இரண்டாம் சுற்று  தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கின்றனர். அதேபோல் மக்களுக்கு இடையிலான இடைவெளி, கூட்டம் கூடுவதை தடுக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை அடுத்த ஆறுமாத காலத்திற்கு முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.

சுகாதார அமைச்சர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச மருத்துவ துறையினர் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த காரணிகள் அனைத்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்தும் அடுத்த கட்டமாக அரசாங்கம் மற்றும் மருத்துவ அதிகாரிகள் எவ்வாறான நகர்வுகளை கையாளவுள்ளனர் என்பது குறித்து தெளிவுபடுத்துகையில்,

இது குறித்து சிறப்பு வைத்திய அனுருத்த பாதெனிய தெளிவுபடுத்துகையில்,

நாட்டில் இன்னமும் வைரஸ் தாக்கம் குறையும் அறிகுறி தென்படவில்லை. ஆகவே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமையே எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்தில் நோயாளர்களை முழுமையாக கண்டறிய முடியாத நிலைமையும் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களில் 20 வீதமான நபர்களுக்கு நோய் அறிகுறிகள் அடையாளம் காட்டுவதில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதுமட்டும் அல்ல நோயாளர்களை கண்டறிய எவ்வாறான பரிசோதனைகளை நடத்துவது என்பதும் தெரியவில்லை. நாட்டில் மொத்தமாக எத்தனை நோயாளர்கள் உள்ளனர் என்பது குறித்த துல்லியமான எண்ணிக்கை அவசியமாகும். அதற்கு முதலில் வைத்தியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்க 100 மில்லியன் ரூபாய்கள் அவசியமாகும். அந்த ஒதுக்கீடுகளை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். இப்போது ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு மக்களை நெருக்கடியில் தள்ள வேண்டாம், நாட்டில் நோய் தொற்றுகளை நீக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டு துரிதமாக செயற்படுவது அவசியம் என்றார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கையில்,

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகக் கவனமாக செயற்பட வேண்டும். அதுமட்டும் அல்ல மக்கள் தமக்குள் ஏதேனும் மாற்றங்கள் தென்படுமாயின் உடனடியாக அறிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மட்டும் அல்லாது சகல மக்களையும் பரிசோதனைக்கு உற்படுதும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் மக்களை ஒன்றுகூடும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றோம். ஏனெனில் இந்த நாட்டில் இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட முடியாதுள்ளது. ஆகவே தான் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமைகளை கண்காணித்து மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். எவ்வாறு இருப்பினும் மேலும் இரு வாரங்கள் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கத்தின் அனுமதியுடன் முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் கலாநிதி இந்திய கருணாதிலக கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இப்போது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றதோ அதேபோன்று ஒரு வேலைத்திட்டம் அல்லது அதைவிட கடுமையான நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டும். ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டும். எவ்வாறு இருப்பினும் அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் பரவலின் இரண்டாம் சுற்று ஆரம்பிக்க பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மீண்டும் இரண்டாம் சுற்றாக கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவே நாம் கருதுகின்றோம் . ஆகவே இப்போது மக்களை ஒன்றுகூட விடாது தடுக்க என்ன சட்ட திட்டங்கள் கையாளப்படுகின்றதோ அதை மேலும் பலப்படுத்தி அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டினை முடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சமூக வைத்திய சங்கத்தின் பிரதிநிதிகள் இது குறித்து கூறுகையில்,

தனியார் போக்குவரத்து  செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்கள் ஒன்று கூடுவதை தடுத்து அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநீக்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் பணிக்கப்பட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் இடையிலான சம இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும். கைகளை கண்டிப்பாக கழுவுதல் என்பன மிக அவசியமானதாகும். இந்த சுகாதார செயற்பாடுகள்  அடுத்த ஆறுமாத காலமேனும்  முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறுகையில்,

சுகாதார அதிகாரிகள் முன்வைக்கும் காரணிகள் அனைத்தையும் கணவதில் கொண்டு அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க தயாராக உள்ளது. அதுமட்டும் அல்லாது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும்  மருந்துகளை தடைகளின்றி வழங்கவும் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல நெருக்கடிகள் இருந்தாலும் கூட அனைவரும் இணைந்து முதலில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டினையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.