தலைநகரில் பணிபுரியும் மலையக இளைஞர்கள் நெருக்கடியில்…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தலைநகர் கொழும்பில் தொழில் நிமிர்த்தம் வந்தவர்கள் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது. குறிப்பாக மலையக பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமது பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை முற்றாக கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தொழில் நிமிர்த்தம் தலைநகரில் பணிபுரியும் மலையக தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். தமக்கான உணவு, மருந்துகள், தங்குமிட வசதிகள் எதுவுமில்லாது கொழும்பில் முடக்கப்பட்டுள்ள நிலைமை உருவாக்கியுள்ளதாக தொடர்ச்சியாக தமது ஆதங்கத்தை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  கொழும்பில் தங்கியுள்ள   அனைத்து வெளிமாவட்ட மக்களுக்கும் அவர்களது சொந்த மாவட்டதுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்.சண்.குகவரதன் போன்றவர்கள் தங்களது முகப்புதாக பதிவுகளில் இவற்றை கூறியுள்ளனர். அதேபோல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், செந்தில் தொண்டமான் ஆகியோரும் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.