பத்து தொன் மருந்துப்பொருட்கள் இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு
” கொவிட் – 19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் நெருக்கடி நிலையில் இலங்கை மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசியமான மருந்துகளை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
“கொவிட் – 19” கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக 2020 மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்கள் மட்டத்திலான காணொளி மூலமான மாநாடு ஒன்று இந்திய பிரதமரின் நரேந்திர மோடியின் யோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது சார்க் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்வது குறித்து அரச தலைவர்கள் கலந்துரையாடியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை நிபுணர்கள் 2020 மார்ச் 26 ஆம் திகதி காணொளி மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்தனர் இந்நிலையில் இலங்கைக்கான உதவிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கையொன்றை முன்வைத்தது. அதற்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் எயார் இந்தியா விசேட விமானம் ஒன்றின் மூலமாக நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இலங்கைக்கான ஆதரவில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டினை காண்பிக்கும் மற்றொரு சந்தர்ப்பமாக இது அமைகிறதெனவும், உள்நாட்டில் காணப்படும் சவால்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தனது நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் தமது வளங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதில் இந்தியா மிகவும் உறுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.