டொலருக்கான பெறுமதி அதிகரிப்பானது இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்

தற்போது மக்களுக்கு கொடுக்கும் சலுகைகளுக்கான நெருக்கடியையும் எதிர்காலத்தில் மக்களே அணிபவிக்க நேரிடும் என்கிறது இலங்கை மத்திய வங்கி

கொரோனாவின் தாக்கம் உலக பொருளாதரத்தை ஆட்டம் காணவைத்துள்ள நிலையில் டொலருக்கான விற்பனை பெறுமதியின் அதிகரிப்பானது இலங்கை போன்ற நாடுகளுகளுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச கடன்களை செலுத்துவதில் மிகப்பெரிய சர்வால்களை சந்திக்க நேரிடும், அதேபோல் இப்போது மக்களுக்கு சலுகைகளை கொடுத்தாலும் இதற்கான விளைவுகளை மக்கள் அனைவரும் சந்திக்க நேரிடும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் நாட்டின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நெருக்கடிகளில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க முகங்கொடுக்கும் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எச். கருணாரத்ன  இதனை தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கையாளவும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இதுவரையில் 240 பில்லியன்  ரூபாய்கள் வழங்கியுள்ளது. அவற்றில் 140 பில்லியன்  ரூபாய்கள் இப்போதே மக்களின் கைகளுக்கு சென்றடைந்துவிட்டது. நாட்டிலுள்ள மக்களின் கைகளில் பணமாக இந்த தொகை உள்ளது. நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன்னாயத்தமாக பணத்தை கையில் வைத்துக்கொள்வது இயல்பான விடயமேயாகும். பொதுவாக சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான தொகை புழக்கத்தில் இருக்கும். ஆனால் வழமைக்கு மாறாக  இப்போதே 140 பில்லியன்  ரூபாய்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் நூறு பில்லியன் ரூபாய்கள் அனைத்து வணிக வங்கிகளிலும் இருப்பாக உள்ளது.  இப்போது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எவ்வளவு பணம் தேவை என்பதையும் ஆராய்ந்தே மத்திய வங்கி இந்த தீர்மானம் எடுத்துள்ளது.

இப்போதே பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம். இன்னும் சில காலத்திற்கு இதனை வழங்கியாக வேண்டும். அதே நேரத்தில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமை, கடன்கள் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளமை என்பதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும். அதற்கும் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டும். ஆகவே எதிர்காலத்தில் மக்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதற்கு மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மக்களுக்கு சலுகைகளை கொடுத்துவிட்டோம். எதிர்காலத்தில் அனைவரும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும். கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். நடுத்தர வியாபாரிகள் இதில் அதிக நெருக்கடிகளை சந்திப்பார்கள், எனினும்  அரசாங்கம் அதற்கான மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அதற்கான ஆலோசனைகளை நாமும் வழங்கி வருகின்றோம்.

நாட்டின் மொத்த கடன்தொகை 13 ட்ரில்லியன் உள்ளது, இதில் இந்த ஆண்டுக்கான செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதில் பாரிய சவால்கள் உள்ளது. தேசிய ரீதியில் திறைசேரி பிணைமுறி மூலம் 292 பில்லியன் ரூபாய்கள் கடன் செலுத்தப்படவேண்டும். இதில் ஓரளவு செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் இதில் மிகப்பெரிய சவாலாக அமையாது என நம்புகிறோம். எனினும் சர்வதேச கடன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள்  இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கியாக வேண்டும். நீண்டகால, குறுகியகால கடன்களை கருத்தில் கொண்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இப்போது சில நாடுகள் எமக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். சிறுதி காலம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதில் சவால்கள் உள்ளன. டொலர் பெறுமதியின் அதிகரிப்பு காரணமாக எமது நாடுகளுக்கு வரும் முதலீடுகள் வேறு நாடுகளுக்கு செல்கின்றது. எனினும் முதலீடுகளை செய்யுமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். சார்க் நாடுகளிடம் இது குறித்து பேசியுள்ளோம். அமைச்சரவையிலும் இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கடன்களை பெற்றுக்கொள்ளவும் சில தீர்மானங்கள் உள்ளன. இலகு கடன் திட்டங்களை சீன மத்திய வங்கி, இந்திய வங்கியின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்திற்கான கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

அதேபோல் அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 200 ரூபாவை எட்டியுள்ளது. இது உலகத்தின் இன்றைய நெருக்கடி நிலைமையின் பிரதிபலிப்பாகவே கருத வேண்டும். அமெரிக்க டொலருக்கான பெறுமதி அதிகரிப்பானது இப்போது கடன் தொகையை செலுத்தும் செயற்பாட்டில் தாக்கத்தை செலுத்தும். எனினும் நீண்ட காலம் இதன் தாக்கம் இருக்காது என்றே கருதுகின்றோம். எனினும் டொலருக்கான பெறுமதி அதிகரிப்பு தேசிய  ரீதியில் பாரிய தாக்கத்தை செலுத்தும். புத்தாண்டை இலக்குவைத்து பல பொருட்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது, எனினும் கொரோனா தொற்றுநோய் பரவலுடன் அவை அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச முதலீடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. செலவு நூறு வீதம் அப்படியே இருக்கையில் வருமானம் 50 வீதத்தால் குறைவடைந்துவிட்டது. ஆகவே அனாவசிய இறக்குமதி அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அனைவருமே டொலரில் முதலீடு செய்வதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இறக்குமதியை நிறுத்துவதே முதல் தெரிவாக உள்ளது. எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்பதே நாம் கூறும் வலியுறுத்தலாகும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.