இம்முறை உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூசைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒலிபரப்பாக்கும் – 1971 ஆயுதக் கிளர்ச்சியின் பின்னர் முதல் தடவையாக ஈஸ்டர் வழிபாடுகள் இரத்தாகின்றது

கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கிறிஸ்தவ ஆலையங்களில் இடம்பெறவிருந்த   உயிர்த்த ஞாயிறு  மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள்  தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் என பேராயர் இல்லம் அறிவித்துள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி காலத்தின் பின்னர் முதல் தடவையாக உயிர்த்த ஞாயிறு  மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள்  தடைசெய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்தவ மக்கள் இம்முறை ஈஸ்டர் தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையிலும் தற்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக  இம்முறை உயிர்த்தஞாயிறு பூசைகள் அனைத்தையும் ஆலயங்களில் இருந்து வழிபடுவதை தடைசெய்ய பேராயர் இனால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் பேராயர் இல்லத்தில் இருந்து வழிபாடுகள் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும்.

அந்த வகையில், இன்று பெரிய வியாழன் வழிபாடுகள் பிற்பகல் 4.45 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் எனவும், நாளை பெரிய வெள்ளி வழிபாடுகள் பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் எனவும் சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்பு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூசை காலை 7 மணிக்கு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.  இந்த நிகழ்வுகளுக்கு நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பேராயர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் எனினும் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை எனவும் பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது முதல் முதலில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் இலங்கையில் கடந்த 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதக் கிளர்ச்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு பூசைகள் அனைத்தையும் அரசாங்கம் தடை செய்தது. அதன் பின்னர் இம்முறையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.