அடுத்த 14  நாட்களில்  சகல கொரோனா தொற்றாளர்களையும் கண்டறிய முடியும்

இன்னும் இரு வாரங்களில் எம்மால் மீளமுடியும் என்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா

இலங்கையில்  இனியும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்கள் இருப்பார்கள் என்றால் அடுத்த 14 தினங்களில் அவர்களை கண்டறிந்துகொள்ள முடியும். இப்போது அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை இன்னும் இரண்டு வாரங்களுக்கு முன்னெடுத்தால் அதன் பின்னர் எம்மால் மீள முடியும் என்கிறார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

நாட்டின் தற்போதுள்ள நிலைமைகள் மற்றும் அடுத்த கட்டமாக செய்யவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்று என்பது புதிய ஒன்றாகும். இவ்வாறான நோய்த்தொற்றுக்கு இதற்கு முன்னர் நாம் முகங்கொடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் எந்தவித முன்னாயத்தமும் இல்லாது, மருத்துவ வேலைத்திட்டங்களும் இல்லாது எம்மால் இந்த நெருக்கடியை இதுவரையில் சரியாக முகங்கொடுக்க முடிந்துள்ளது. எமது வைத்திய அதிகாரிகள் மக்களை பாதுகாப்பதில் மிகச்சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இப்போது வரையில் 180 க்கும் அதிகமான தொற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இனியும் இந்த நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் அனைவருமே அடுத்த 14 நாட்களில் தொற்றளர்கள் யார் என்பது வெளிப்பட்டுவிடும். இந்த நோயின் தன்மைக்கு அமைய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்குமாயின் அவருக்கான நோய் அறிகுறி 14 நாட்களில் தென்பட்டுவிடும். எனவே அடுத்த இரண்டு வாரங்களில் இதற்கான முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

அவ்வாறு நோயாளர்கள் இருப்பார்கள் என்றால் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அவர்களை அனுமதிக்க  நாட்டில் சகல பகுதிகளிலும் வைத்திய பரிசோதனை நிலையங்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்களை குணப்படுத்தி வெகு விரைவில் நோயற்ற நாடாக எம்மால் உருவாக முடியும். எனவே மக்கள் அனைவரும் அவர்களின் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அனைவரும் இடைவெளிகளை கடைப்படித்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.