சீவல் தொழிலாளர்களது நாளாந்த உற்பத்திகளை சந்தைப்படுத்த விஷேட ஏற்பாடு – அமைச்சரவை அனுமதித்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைப் படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தகைய தொழில்துறையை முன்னெடுத்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்றையதினம் அமைச்சரவையின் கவனத்திக்கு கொண்டு சென்ற அமைச்சர் மேலும் கருத்து கூறுகையில் , கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால் நாளாந்தம் இறக்கப்படும் “கள்” சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் அவர்களால் நாளாந்தம் இறக்கப்படும் “கள்” வடிசாலை நிறுவனத்துக்கும் போத்தலில் அடைப்பதற்குமாக பெற்றுக்கொடுப்பதற்கு பொறிமுறை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி தந்துள்ளது. இதன்பிரகாரம் அத்தொழிலை செய்பவர்கள் நாளாந்தம் இறக்கும் “கள்”ளை குறித்த வடிசாலை நிறுவனங்களுக்கும் போத்தலில் அடைக்கும் நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.