வெளிநாட்டு சேமிப்பிலுள்ள தமது பணத்தை இலங்கையில் சேமிப்பு செய்யுங்கள்

வெளிநாட்டுவாழ் இலங்கையர்களுக்கு  அரசாங்கம் அழைப்பு:  அதிக சலுகைகளும் அறிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்  தாம் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள  பணம், மற்றும் அவர்களின் கையிருப்பில் உள்ள மேலதிக பணத்தை இலங்கையில் சேமிப்பு செய்வதன் மூலமாக வரி சலுகைகள் பெற்றுக்கொள்ளவும், குறைந்த நிபந்தனைகளுடன் முதலீடுகளை செய்யமுடியும் எனவும்  அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான கொள்வனவு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் இலங்கைக்கு வெளியில் வர்த்தக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கையர்கள் அனைவரும் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள பணம், மற்றும் அவர்களின் கையிருப்பில் உள்ள மேலதிக பணத்தை இலங்கையில் சேமிப்பு செய்வதன் மூலமாக வரி சலுகைகள், நிபந்தனைகள் குறைந்த வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரமும் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சாதாராண வங்கிகளில் வழங்கும் வட்டிக்கு மேலதிகமாக இரண்டு வீத வட்டி அதிகரிப்பில் மத்திய வங்கியின் செயற்திட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும். குறைந்தபட்சம் ஆறுமாத கால இருப்பில் இருக்க வேண்டும்.

இன்று நாட்டின் ஏற்றுமதியிலும் பாரிய சிக்கல் நிலைமைகள் உருவாகியுள்ளது. குறிப்பாக எமது ஆடை உற்பத்தி ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க போன்ற  நாடுகளில் பாரிய கேள்வியை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இப்போது கொரோனா தாக்கம் அந்த நாடுகளை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எமது ஏற்றுமதியிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் மாணிக்கக்கல், ஏனைய ஏற்றுமதிகளும் இப்போதுள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீண்டும் சாதாராண நிலைமைக்கு வரும் வரையில் எமது ஏற்றுமதியில் நெருக்கடிகள் நிலவும். எனவே மாற்று வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். அத்துடன் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.  எனவே நாட்டுக்கு அவசியமான பொருட்கள் தவிருந்து ஏனைய அவசியம் இல்லாத அனைத்து பொருட்கள் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பல பொருட்கள் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டினை பாதுகாக்கவும் ரூபாவின் பெறுமதியை தக்கவைக்கவும் வேறு வழிமுறைகளை எம்மால் இப்போது கையாள முடியாது. எனவே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.