வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கித்தவிக்கும் 33 இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்க தீர்மானம்

21 நாட்கள் தனிமைப்படுதவும் ஏற்பாடுகள் : வேறெந்த இலங்கையரும் இலங்கைக்கு வர அனுமதி மறுப்பு

உலகில் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கத்தவித்துவரும் 33 இலங்கையர்களை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. வெகு விரைவில் அவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதுடன் 21 நாட்கள் தனிமைப்படுதலில் வைக்கவும் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. வேறெந்த இலங்கைவாழ் வெளிநாட்டவர்களையும் இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பத்திரன இதனை அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெவ்வேறு நாடுகளில் விமான நிலையங்களில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் 33 பேரை இலங்கைக்கு வரவழைக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரமும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரச அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட 33 இலங்கையர்கள் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது. இவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இப்போது வரையில் ஓமான் மஸ்கட் விமான நிலையத்தில் இனது பேரும், ஓமான் விமான நிலையத்தில் மூன்று பேரும், சிங்கப்பூர் விமானநிலையத்தில் ஏழு பேரும், எதியோப்பிய அடிஸ் அபாபா நகரில் உள்ள ஒருவரும், துருக்கியின் அங்காராவில் உள்ள இருவர், மலேசியாவில் உள்ள ஒருவரும், புதுடில்லியின் உள்ள ஒருவரும், மாலைதீவுகளில் உள்ள ஒருவரும், லண்டலில் உள்ள இருவர், சீசெல்ஸ் நாட்டில் ஒருவரும், பபுவாநியுகினியில் மூவரும், போர்த்துக்கலில் உள்ள ஒருவரும், எகிப்தில் உள்ள ஐந்து இலங்கையர்கள் இவ்வாறு இலங்கைக்கு வரவழைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 33 பேருக்கு மட்டுமே இப்போது அனுமதி உள்ளது. ஏனைய எவருக்கும் இப்போது அனுமதி இல்லை. நாட்டின் நிலைமைகள் வழமைக்கு வந்தவுடன் இலங்கையர்கள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு வர முடியும். இப்போது வைரஸ் பரவல் துரிதமாக பரவிவருகின்ற நிலையில் அனைவரையும் நாட்டிற்கு வரவழைக்க முடியாது. மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. நாம் நாட்டு மக்களை நேசிக்கின்றோம். ஆகவே மக்களுக்கு எந்த இடையூறும் கொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. இப்போது வேறு வழியில்லாது விமானநிலையங்களில் தவிக்கும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.