கொரோனா வைரஸில்  இருந்து மீண்டாலும் நாடாக பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் – அசாதாரண நிலைமைகளை கையாள ஒரு திட்ட வரைபை உருவாக்க முடியாது என்கிறது அரசாங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை கையாள ஒரு திட்ட வரைபை உருவாக்கி அதில் தீர்வு காண முடியாது. அந்த நேரத்தில் நாம் முகங்கொடுக்கும் சவால்களை பொறுத்தே மாற்று வேலைத்திட்டங்களை உருவாக்க முடியும். எவ்வாறு இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் நாடாக மீண்டாலும் தேசிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உலகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், அனைத்து நாடுகளும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இலங்கை போன்ற நாடுகளும் மிகப்பெரிய தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளன. சாதாராண நிலைமைக்கு மாறான அசாதாராண நிலைமைகளை இப்போது முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இப்போது நாம் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைக்கு ஒரு திட்ட வரைபை உருவாக்கி அதில் தீர்வு காண முடியாது. அவ்வாறு எவராலும் வேலைத்திட்டமொன்றை உருவாக்க முடியாது. நாடாக நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு அந்த நேரத்தில் நாம் முகங்கொடுக்கும் சவால்களை பொறுத்தே மாற்று வேலைத்திட்டங்களை உருவாக்க முடியும்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தில் இலங்கையில் உணவு மிகப்பெரிய தட்டுப்பாட்டை சந்திக்க நேர்ந்தது. கிளர்ச்சி காலங்களில் கூட பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அனைத்து பிரச்சினைகளுக்கும் தேசிய ரீதியில் தீர்வு காண முடியாது. உலக நாடுகள் இணைந்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. இலங்கையில் சுய தீர்மானங்களை எடுக்க மமுடியுமா என தெரியவில்லை. ஆனால் ஏனைய நாடுகளை போலல்லாது எமது நாடு பல நல்ல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. எனினும் பொருளாதார ரீதியிலும், தேசிய ரீதியிலும் பல சவால்களை சந்திக்க நேரிடும்.

“கொவிட் 19” வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் துரிதமான  வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எதிர்காலத்திலும் பல நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை உருவாக்கி வைத்துள்ளது. அது குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரமும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது வரையில் நாட்டில் 54 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் இப்போதே கொடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி, ஓய்வூதியக்காரர்கள், நோயாளர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டு நிவாரணங்கள்  மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் அப்பால் பல இலட்சம் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகளை வழங்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.