“முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை” – பிரான்ஸ் அரசாங்கத்தை எழுத்தாளர் இராயகன் சாடுகிறார்

“முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை” – பிரான்ஸ் அரசாங்கத்தை எழுத்தாளர் இராயகன் சாடுகிறார்

தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள எழுத்தாளர் இராயகன், தனது பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தான் தன்னை 24 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தனது துணைவியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலைசெய்ததாகவும் இதனால் குடும்பத்தில் அனைவரும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொற்றுக்கு முழுக்காரணமும் பிரான்ஸ் அரசாங்கம் என்பதை, “இங்கு சுப்பர்மாக்கற் வைரஸ்சை பரப்பும் இலாப வேட்டையில் இறங்கியது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை என்ற பெயரில் எந்த ஒழுங்குவிதியையும் முன்வைக்காது அரசு, மூடிய கட்டடத்தில் ஒரு சதுர மீற்றருக்கு எத்தனை பேர் என்ற வரப்பைக் கூட போடாது கொள்ளை அடிக்கத் திறந்துவிட்டது.” என்ற அவரது பதிவில் இருந்து அறிய முடிகிறது.

“எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர்.” என்பதில் இருந்து கொரோனா நோயாளிகளை பிரான்ஸ் அரசாங்கம் கைவிட்டுள்ளது தெளிவாகிறது.

அவர் இறுதியாக எழுதிய குறிப்பு : யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த மருந்து, இந்த மருந்து என, யாருக்கும் – யாரும் உபதேசம் செய்யாதீர்கள். சமூகத்தை முதன்மைப்படுத்திச் சிந்தியுங்கள். இயற்கை குறித்தும், பிற உயிரினங்கள் குறித்தும் அக்கறை கொள்ளுங்கள். நாளைய சமூகத்திற்கு எதை கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படுங்கள். வதந்திகளை, வாந்திகளை, நம்பிக்கைகளை கைவிட்டு, பகுத்தறிவோடு மனிதனாக சிந்திக்கவும் – வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நாளைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும். என்னுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இந்த எதார்த்தம் கடந்து யாரும் வாழவில்லை.

Leave A Reply

Your email address will not be published.