தேர்தலை நடத்துவதில் சட்ட ஆலோசனைக்கு அப்பால் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கேளுங்கள்

நிறைவேற்று அதிகாரமும் - தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தலை நடத்துவதில் மோதிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை நிலையில் தேசிய அனர்த்தமாக இதனை அறிவித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதில் வெறுமனே அரசியல் அமைப்பு மற்றும் சட்ட ரீதியிலான ஆலோசனைகளை கேட்பதை விடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள். தேர்தல் ஒன்றினை நடத்துவதில் நிறைவேற்று அதிகாரமும் – தேர்தல்கள் ஆணைக்குழுவும் முரண்படுவது ஆரோக்கியமானதல்ல என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூட்டாக வலியுறுத்துகின்றனர்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்த பல அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தேர்தல்களை கண்காணிக்கும் சுயாதீன அமைப்புகளான பெபரல் அமைப்பின் தலைவர்  ரோஹனா ஹெட்டியாராச்சி,  தேர்தல் வன்முறைகளை  கண்காணிக்கும் மையம் (சி.எம்.இ.வி) யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயக்க, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்)வின் தலைவர்  அசோகா ஒபேசெகரே,  கபே இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  மக்கின் மனாஸ், தேசிய தேர்தல்கள்  கண்காணிப்பு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  ரசங்க ஹரிசந்திர , சுதந்திர தேர்தல்கள் பிரசார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபோத ரத்நாயக்க , தாய்நாட்டுக்கான பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மினி வீரசூரியா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அறிக்கையில் அவர்கள் மேலும் கூறுவதானது,

பாராளுமன்ற தேர்தல்கள் இம்மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்த  நிலையில் நாட்டின் தற்போதுள்ள அசாதாரண நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை பிற்போட்டுள்ளனர். இதனை அடுத்து அனைத்து தரப்புகளும் முன்வைக்கு கருத்துகள் வாத விவாதங்களை சகல தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கூர்மையாக கவனித்து வருகின்றது.  அதே நேரத்தில், இவ்வாறான நெருக்கடி சூழல் ஒன்றின் போது மக்களை பாதிக்கும் எவ்வகையான செயற்பாடுகளையும் முன்னெடுக்காது மக்களை பாதுகாக்க ஜனாதிபதி முன்னெடுத்த உடனடி வேலைத்திட்டங்களை நாம் பாராட்டுவதுடன் தேர்தலை நடத்தி அதன் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேர்தல்கள் ஆணைக்கு உடனடியாக எடுத்த தீர்மானங்களுக்கும் எங்களின் உயரிய மரியாதையை செலுத்துகின்றோம். அத்துடன்  தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு  இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பிய  கடிதங்கள் மற்றும் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய பதில் கடிதம் என்பன குறித்தும் எமது அவதானத்தை செலுத்தியுள்ளோம்.

இதன்போது சட்ட ரீதியான மற்றும் அரசியல் அமைப்பு ரீதியிலான பல காரணிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனினும் எமது நோக்கமானது இதில் அரசியல் அமைப்பு ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ இவற்றை விமர்சிப்பது அல்ல. தேசிய ரீதியிலான ஒரு பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ள வேளையில் இதில் அரசியல் அமைப்பு சாத்தியப்பாடுகள் குறித்து சிந்திப்பதை விடுத்து  ஒரு பாகுபாடற்ற சமூக-அரசியல் பின்னணியை உருவாக்குவதே ஒவ்வொரு  அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பொறுப்பாகும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எதிர்பாராத விதமாக இவ்வாறான பயங்கரமான  கோவிட் -19  கொரோனா வைரச தொற்றுநோய் பரவலின் காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஜனநாயக வழிமுறையில் நடைபெறவேண்டிய தேர்தலும் பாதிக்கப்பட்டுள்ளது.காலவரையற்ற விதத்தில் தேர்தலை பிற்போட நேர்ந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் நிறைவேற்று அதிகாரமே தீர்மானம் எடுக்கவேண்டிய மிக முக்கிய பொறுப்பில் உள்ளது என்பதை கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். நிறைவேற்று அதிகாரம் அரசியல் அமைப்பை தாண்டிய அதிகாரத்தை கொண்டுள்ள போதிலும் கூட இவ்வாறான நெருக்கடி ஒன்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அதனை செயற்திறனுடன்  தீர்வு காண வேண்டிய சகல முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானங்களை முன்னெடுக்கையில்   நிறைவேற்று அதிகாரமும் – தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஒன்றுக்கொன்று முரண்படாது, கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாத பொதுவான தீர்மானம் ஒன்றினை எட்ட வேண்டும்.

அதேபோல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அனர்த்த வேலைத்திட்டங்களில் ஈடுபட  வேட்பு மனுக்களில் பெயரிடப்பட்டுள்ள பல வேட்பாளர்கள் இந்த முக்கியமான காலகட்டத்தில் கூட தங்களை பிரசித்திபடுத்திக்கொண்டு தேர்தல் சுய இலாபங்களை பெற்றுக்கொள்ள  பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்   வரம்புகள் குறித்து நாம் போதுமான அளவு அறிந்திருக்கிறோம். எனினும் நாட்டில் சகல மக்களும் நெருக்கடியொன்றை சந்தித்து வருகின்ற நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் முன்னெடுக்கும் பொறிமுறையில் சகல அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுக்கொள்ள முடியும். ஆனால் அதனை சாட்டாக வைத்து அரசியல் பிரசாரம் செய்யாதிருக்க சகல கட்சி தலைவர்களும் தீர்மானம் எடுக்க வேண்டும்.

அதேபோல் இவ்வாறான தேசிய அனர்த்தம் ஒன்றிற்கு அனைவரும் முகங்கொடுத்து வருகின்ற நிலையில் இதில் சட்ட ரீதியிலான காரணிகளை மாத்திரமே கருத்தில் கொள்ளாது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகள் அவர்களின் பரிந்துரைகள் என்ன என்பதையும் அதிக கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தேர்தல் ஒன்றினை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் நிலையில் இப்போதுள்ள அனர்த்த நிலைமைகளை கையாள நியமிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள தேசிய நடவடிக்கை மையம் மற்றும் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த நாட்டில் எந்தவொரு தனி பிரஜையும் அல்லது அதிகாரியும் பாதிப்பில் இல்லை என்பதை உறுதிபடுத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அதேபோல்  தேர்தல் சட்டங்களின் பிரகாரம் வேட்பாளர்களுக்கு தங்கள் பிரச்சாரத்தை நடத்த சரியான வாய்ப்பும் போதுமான பிரச்சார காலமும் வழங்கப்பட வேண்டும், அத்துடன் பொதுமக்கள்  தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முழுமையான உரிமை உண்டு. இவற்றை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிபடுத்த வேண்டும். நாட்டில் சகல மக்களும் தேர்தலில் ஈடுபட தயாராக உள்ளனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சமூக இடைவெளிகளை பின்பற்ற கோரும் இந்த நேரத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்ற வேளையில் தேர்தலை நடத்தினால் அதனால் முழுமையான தேர்தல் பெறுபேறுகள் கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாட்டின் சகல வாக்களர்களின் முழுமையான ஒத்துழைப்பில் நடத்தபடும் தேர்தல் மட்டுமே நாட்டின் ஜனநாயக தேர்தலாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என அவர்களின் கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.