சர்வதேச நாடுகளில் “கொவிட் -19 ” பரவல் இருப்பதால் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்

மேலும் சில ஆண்டுகளுக்கு கண்காணிப்பு கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் - தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி அறிவுரை.

இலங்கையில் “கொவிட் -19 ” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதாக கருதப்படுகின்ற போதிலும் கூட சர்வதேச நாடுகளில் இன்னமும் “கொவிட் -19 “இன் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே எந்த வழிகளிலேனும் மீண்டும் இலங்கைக்குள் “கொவிட் -19” தொற்றுநோய் ஊடுருவக்கூடிய அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளதாக  தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார். மேலும் சில ஆண்டுகளுக்கேனும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

“கொவிட் -19 ” கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கம் குறித்த தற்போதைய நிலைமைகள் மற்றும் தொடர்ந்தும் இலங்கைக்கு இருக்கும் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்து வினவியபோதே அவர் இவற்றைக் கூறனார். அவர் இது குறித்தும் மேலும் கூறுகையில்,
கேள்வி:- இப்போது வரையில் தொற்றுநோய் பரவலின் நிலைமை எவ்வாறு உள்ளது ?
பதில்:- கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்கையில் இப்போது நாட்டில் “கொவிட் -19 ” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலானது குறைந்த மட்டத்திலேயே இனங்காணப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்தும் அடையாளம் காணப்படுகின்றனர். ஆகவே இந்த தொற்றுநோய் பரவலின் தன்மை குறைந்த வண்ணமே உள்ளது என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
கேள்வி:- எவ்வாறான தன்மையால் “கொவிட் -19 ” தொற்றுநோய் குறைகின்றது என நீங்கள் கருதுகின்றீர்கள் ?

பதில் :- வைத்திய பரிசோதனைகளின் தரம் மற்றும் சுகாதார துறையினரின் துரிதமான  செயற்பாடுகள் மட்டுமே இதில் அதிக வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஒரு நோயாளியை அடையாளம் கண்டவுடன் அவர் குறித்த துரித கதியிலான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை மற்றும் அவருடன் நெருக்கமாக பழகிய நபர்களின் (இரண்டு அல்லது மூறு அடுக்கு)  குறித்து உடனடியாக கவனம் செலுத்தி  அவர்களை தனிமைப்படுத்தி அவர்களை மீதான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றமை என்ற காரணிகள் நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்த சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் மக்களும் சுகாதார ஆலோசனைகளை அதிகளவில் பின்பற்ற கற்றுக்கொண்டுள்ளனர். மக்களின் இந்த ஒத்துழைப்பு எமக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கேள்வி:- அப்படியென்றால் இப்போது சமூகத்தில் “கொவிட் -19 ” தொற்றுநோயாளர் எவரும் இல்லை என்பதா உங்களின் நிலைப்பாடு?

பதில்:- அவ்வாறு கூறவில்லை, சமூகத்தில் கொரோனா தொற்றுநோயாளர்கள் இருக்கலாம், ஆனால் பெரியளவில் நோயாளர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் மாத்திரம் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் குறித்தும் சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும் இதில் சுயமாக தம்மை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு தனது உடலில் மாறுதல்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களிடம் அறிவிக்க வேண்டும். “கொவிட் -19 ” வைரஸ் தாக்கம் இல்லாது வேறு நோய்கள் இருந்தாலும் கூட அவற்றை தெரியப்படுத்தி முறையான பரிசோதனைகளில் ஈடுபட்டால் தாமும் இந்த சமூகமும் பாதுகாக்கப்படும் என்பது ஒவ்வொரு தனி நபரும் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
கேள்வி:- தற்போதுள்ள  இந்த நெருக்கடி நிலைமைகள் தளர்வடைய மேலும் காலம் அவசியமா ?
பதில்:- இப்போதுள்ள நிலைமை ஆரோக்கியமானதாக தென்படுகின்றது. ஆனால் எதிர்வுகூருதல் கடினமானதேயாகும். இன்னும் ஒருவார காலம் நிலைமைகளை கவனத்தில் கொண்டு மேலும் இவ்வாறான கட்டுப்பாடுகள் அவசியமா அல்லது ஊரடங்கு சட்டத்தை தளர்க்க முடியுமா என்பது குறித்து அறிவிக்க முடியும். மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களை உருவாக்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் தீர்மானம் எடுக்க முடியும் என நம்புகிறோம்.

கேள்வி:- “கொவிட் -19 ” வைரஸ் தொற்றுநோய் தாக்கம் முற்றாக இல்லாது போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா?

பதில்:- அவ்வாறு முழுமையாக கட்டுபாட்டில் வைத்திருக்க எந்த வாய்ப்புகளும் இல்லை. இன்று உலகில் பல நாடுகளில் இன்னமும் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கையில் எந்த வழிகளிலேனும் மீண்டும் இலங்கைக்குள் “கொவிட் -19 ” வைரஸ் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மீண்டும் விமான நிலையங்களை திறக்கும் நேரங்களில் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே இலங்கையில் இப்போது நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவந்தாலும் கூட இன்னும் சில ஆண்டுகளுக்கு கடுமையான சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தே ஆகவேண்டும். இல்லையேல் மீண்டும் இரண்டாம் சுற்றாக கொரோனா வைரஸ் தாக்கம் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கொவிட் -19 என்பது சர்வதேச அளவில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என்ற சான்றிதழை உலக நாடுகள், சுகாதார அமைப்புகள் வழங்கும் வரையில் அச்சுறுத்தல் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.