வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் சிரமம் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு அவர்களை கண்காணிப்பதில் அரசாங்கம் மும்முரம்

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 5000 பேரளவில் இலங்கைக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனினும் தூதரகங்களின் மூலமாக அவர்கள் குறித்து ஆராய்வதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.  900 இலங்கையர்களை விரைவில் வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

வெளிநாடுகளில் பணிபுரியும், கல்விகற்கும்  இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு வருவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டம் குறித்து அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

வெளிநாடுகளில் சிக்கத் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க அரசாங்கம்  நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் தூதரகங்களை தொடர்புகொண்டு அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சு இப்போதே பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கைர்கள் மீண்டும் நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தும் வருகின்றது.

குறிப்பாக அபுதாபிவுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள  இணை காரியாலையம்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாட்டில் மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் குறித்து அறிவித்து வருகின்றது.  அதேபோல் அங்குள்ள இலங்கையர்களுக்கு இலவச தொலைபேசி வசதியையும் இலங்கை தூதரகம்  ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றை தடுப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம்  மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் குறித்து அறிவுறுத்தி வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்தும் வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் சில சிரமங்கள் காணப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் இப்போது வரையில் வெளிநாடுகளில் கல்விகற்கும் இலங்கை மாணவர்கள் மற்றும் பணிபுரிவோர் உள்ளடங்கலாக 5000 பேரளவில் மீண்டும் இலங்கைக்கு வர அனுமதி கோரியுள்ளனர். எனினும் அவர்களை வரவழைப்பதில் சிரமங்கள் உள்ள நிலையில்  அவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் 900 பேரை உடனடியாக நாட்டுக்கு வரவழைக்க ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டவுடன் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்கவும் சகல ஆயத்தங்களும் செய்துவைக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.