ஊரடங்கு சட்டத்தை தளர்க்கக்கூடாது  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

நாட்டில் ” கொவிட் -19 ” கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதை  கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது. அவ்வறு ஊரடங்குச்சட்டம் தளர்க்கப்படுமாயின் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களை மீண்டும் தனிமைப்படுதலின்  கீழ் கொண்டுவர வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

“கொவிட் -19 ” கொரோனா வைரஸ் பரவும் தன்மை குறைவடைந்துள்ளதாகவும், தற்போது அபாய கட்டத்தை கடந்துள்ள காரணத்தினால் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட்டு நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் சுகாதார பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு மாற்றுக் கருத்தாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்.
“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல்  ஏனைய நாடுகளில் போல எமது நாட்டில் பரவவில்லை என்பது உண்மையே. ஏனைய நாடுகள் அனைத்திலும் ஆயிரக் கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்ற நிலையில் எமது நாட்டில் இதுவரை ஏழுபேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களும் குறைவாகவே உள்ளனர். ஆகவே எமது மருத்துவ நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது. ஆனால் அதற்காக  இப்போதே அனைத்தையும் கைவிட்டுவிட முடியாது.

“கொவிட் -19 ” கொரோனா வைரஸ் தொற்று என்பது ஏனைய நோய்களை போல் கருதப்படக்கூடிய ஒன்றல்ல. இப்போது மிகக் குறைவாக தொற்றுநோய் பரவல் காணப்பட்டாலும் அடுத்த சுற்றுகளில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே இப்போது முன்னெடுக்கும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தாக வேண்டும். இதில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும். ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாகவே எம்மால் நிலைமைகளை சரிவர கையாள முடிந்தது. ஆகவே இப்போது ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் என்றால் மீண்டும் நாட்டில் “கொவிட் -19” கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்.
அவ்வாறு ஊரடங்கு சட்டத்தை தளர்க்க வேண்டுமாயின் இப்போது கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களையும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய நபர்களையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்து அவர்களை மேலும் பரிசோதனை செய்து அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஊரடங்கை தளர்க்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.