ஆட்சி அதிகாரம் முக்கியமா ? மக்களின் பாதுகாப்பு முக்கியமா ?

வலுக்கட்டாயமாக தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது  என்கிறது தேசிய மக்கள் சக்தி

முழு நாடும் அனர்த்தத்தில் இருக்கையில் அரசாங்கத்திற்கு அதிகாரம் முக்கியமா அல்லது மக்களின் பாதுகாப்பு முக்கியமா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நாடே தேர்தலை பிற்போட கோரிவருகின்ற நிலையிலும் வலுக்கட்டாயமாக தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. இப்போது தேர்தலை நடத்தினால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவுரை வழங்குகின்றனர்.

தேசிய மக்கள் சக்கிதியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே கட்சியினர் இதனைக் கூறினார். இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில்,

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள், சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு துறையினர் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். கட்சி பாகுபாடுகள் எதுவும் இல்லாது தேசிய ரீதியில் அனைத்தையும் முகங்கொடுக்க ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றோம். தற்போதுள்ள நிலையில் அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை இல்லை. கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அதனை அப்போத்தைய எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி தமக்கு ஏற்றால் போல் மாற்றிக்கொண்டனர். ஆனால் நாம் அதே செயற்பாடுகள் எதனையும் செய்ய மாட்டோம். இப்போது இந்த நெருக்கடியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான நாம் அமைதியாக அரசாங்கத்திற்கு உதவி வருகின்றோம். ஜனநாயகத்தை பலப்படுத்த அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்.

மேலும், அரசாங்கம் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நிலைமைகளை கையாள மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் அரசியல் செய்யும் நிலையே உள்ளது.அரசாங்கம் தேர்தலை இலக்கு வைத்து தமக்கு சாதகமான விதத்தில் செயற்படுவது மோசமானதாகும். பக்கசார்புடன் நிவாரணம் வழங்கினால் உதவிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடையாது. ஆகவே இதனால் பாதிக்கப்படப்போவது மக்களேயாகும். உலக வங்கி, ஏனைய சர்வதேச நாடுகள் பல இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் பதுக்கிக்கொள்ளாது மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.

இப்போது நாட்டில் தேர்தல் ஒன்றினை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தும் அரசாங்கம்  வலுக்கட்டாயமாக தேர்தலை நடத்த முயற்சிக்கின்றது. இது ஜனநாயக  நாட்டின் தன்மைகள் அல்ல. அரசியல் பிரசாரம் செய்யக்கூடிய சூழல் இதுவல்ல. தேர்தலை நடத்த முன்னர் மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். அதிகாரத்தை விடவும் மக்களின் உயிரை பாதுகாப்பது அவசியம். முதலில் மக்களின் உயிரை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயற்படுவோம். இப்போது தேர்தலை நடத்த அவசியம் இல்லை. சுகாதார துறையினர், நிபுணர்கள் என அனைவரும் இதனைக் கூறுகின்றது. அதற்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் உறுப்பினர் கபீர் ஹசீம் கூறுகையில்.
நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் கூறியும் இன்னமும் பலருக்கு நிவாரணங்கள் கிடைக்கவில்லை, பொருளாதார ரீதியில் அதிகமாக மக்கள் சிரமப்பட்டுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கின்றதா என்ற கேள்வி உள்ளது. தேர்தல் நடத்துவதை விடவும் இவை மிகவும் முக்கியமானதாகும். நாள்கூளியாக வேலைசெய்யும் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே நோய்களில் இருந்து விடுபடுவதை போலவே பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. ஆகவே பொருளாதார போரட்டத்தில் வெற்றிபெற நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக நாம் செயற்பட்டு அரசாங்கம் நிலைமைகளை சரியாக கையாள சகல ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம். அடுத்தகாக மக்களுக்கு வேண்டிய  பண ஒதுக்கீடுகளை செய்யவும், சட்டங்களை உருவாக்குவதில் ஒத்துழைப்புகளை வழங்கவும் நாம் முழுமையாக கைகொடுப்போம். பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும், அவ்வாறு பாராளுமன்றம் கூட்டுவதால் எமக்கான எந்தவித கொடுப்பனவுகள், சலுகைகள் எதுவும் தேவையில்லை. மக்களுக்கான நிதியை ஒதுக்கிக்கொள்வோம். அதற்காகவே நாம் அழைப்பு விடுக்கிறோம். அரசாங்கத்திற்கு அதிகாரத்தை விட மக்கள் முக்கியம் என்றால் பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுக்க வேண்டும். எம்மை கண்டு அரசாங்கம் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. சகல அரசியல் கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவிப்பார்கள். ஆகவே அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். தேர்தல் நடத்த முடியாத நிலையிலேயே பாராளுமன்றத்தை கூட்டக் கோருகின்றோம். இப்போது தேர்தலை நடத்தி நாட்டில் கொரோனா வைரஸ் பிரச்சினைகளை அதிகரிக்க வேண்டுமா அல்லது பாராளுமன்றத்தை கூட்டி மக்களுக்கான நிதியை வழங்க வேண்டுமா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.