அரசியலமைப்பு நெருக்கடியில் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கினால் அதற்கமைய செயற்படத் தயார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய அரசியலமைப்பு பேரவையில் தெரிவிப்பு.

முழு நாடுமே தேசிய ரீதியில் அனர்த்தம் ஒன்றினை சந்தித்துள்ள நேரத்தில் அதனை வெற்றிகொள்ள செயற்பட வேண்டும்.  அதனைவிடுத்து அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க வேண்டாம். அரசியல் அமைப்பு ரீதியில் நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற அரசியல் குழப்பங்களின் போது வியாக்கியானம் அளிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கே இருக்கின்றது, உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கினால் அதற்கமைய செயற்பட  தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய அரசியல் அமைப்பு பேரவையில் தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரையில்  பாராளுமன்றத்தைத் மீண்டும் கூட்டி அதனால் மீண்டுமொரு பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்புப் பேரவை நேற்று முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியதுடன், பிரதமர்  மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஆளும் கட்சி உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் தலதா அத்துக்கோரல,  மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஆகியோரும்  சிவில் சமூகப் பிரதிநிதிகளான ஜாவிட்  யூஸுப், என்.செல்வகுமார், அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் நயாகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தசநாயக்க மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு நெருக்கடிகள், மற்றும் ” கொவிட் -19 ” கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகள் குறித்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு தீர்வொன்று முன்னெடுக்கும் நோக்கத்திலும் நேற்று அரசியல் அமைப்பு பேரவை கூட்டப்பட்டது. ஆரம்பத்தில் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்துள்ளனர். சுயாதீன ஆணைக்குழுக்களினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளும் நேற்றைய தினம்  ஆராயப்பட்டது. அதேபோல்  சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரண்டு கடிதங்களும் இங்கு அவதானத்தில் கொள்ளப்பட்டது.

தேர்தல் காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்துக்குள் மேற்கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக மற்றும் தலதா அத்துகோரள ஆகியரோ இதுவரை இடம்பெற்ற பொலிஸாரின் இடமாற்றங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைய, பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவர இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், அடுத்த அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இந்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் இங்கு முடிவெடுக்கப்பட்டது. இதன் பின்னர் கொவிட்-19 தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து தற்போது நாட்டின் சுகாதார நிலைமைகள் குறித்து அரசாங்கதின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெளிவுபடுத்தியுள்ளார், பல சவால்கள் காணப்பட்ட போதிலும் வைரஸ் பரவலை  கட்டுப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவான விளக்கமொன்றை முன்வைத்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையால் சர்வதேச நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் குறிப்பாக  மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் இலங்கையர்கள் பணிபுரிகின்ற காரணத்தினால் அவ்வாறு பணியாற்றும் இலங்கையர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  அரசியலமைப்புப் பேரவைக்கு எடுத்துக் கூறினார். அத்துடன் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காகச் சென்றுள்ள மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் தெளிவுபடுத்தியுயுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படுவதன் அவசியம் மற்றும் நிதி விடயங்களை கையாள்வதில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதே சிறந்த தெரிவாக இருக்கும் என காரணம் கூறிய முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கம் மக்களின் பக்கம் சிந்திக்க வேண்டும் என்றால் மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி அனைவரும் இணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும் அதே காரணிகளை வலியுறுத்தியுள்ளார். அதேபோல் இந்த நிலைமைக்கு முகங்கொடுக்கும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் சில காரணிகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் சகலரதும் கருத்துகளில் கவனம் செலுத்திய முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு தேசிய நெருக்கடி என்பதையும், அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் இலாபம் தேடாமல் சகல அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இப்போதுள்ள சூழ்நிலையில் உலகத்தையே பாதிக்கும் வகையில் கொரோனா தொற்றுநோய் பரவல்  நிலவும் நேரத்தில் அதற்கு அனைவரும் முகங்கொடுத்து நாட்டினையும் மக்களையும் காப்பாற்றும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க வேண்டாம். அது இப்போது அவசியமற்ற காரணியாக தென்படுகின்றது. என்னை பொறுத்தவரையில்  பாராளுமன்றத்தைத் மீண்டும்  கூட்டி அதனால் மீண்டுமொரு பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லை.  இதுபோன்ற அரசியல் குழப்பங்களின் போது வியாக்கியானம் அளிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கே இருக்கின்றது, உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கினால் அதற்கமைய செயற்பட  நான் தயாராக உள்ளேன்,நாம் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.