சர்வதேச சுற்றுலாதுறை வழமைக்கு வந்ததும் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டெழும்… யுனெஸ்கோ இணையவழி மாநாட்டில் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

“கொவிட் -19′ கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் எனினும் சர்வதேச சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பலமான சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் எமது கலாசார, பண்பாட்டுடன் கூடிய சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கமாக நாம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்கின்றோம் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசாரம், மற்றும் அறிவுசார் அமைப்புகள் சார்ந்த  நாடுகளில் கலாசார அமைச்சர்களுடன் இணையவழி மாநாட்டில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசாரம், மற்றும் அறிவுசார் அமைப்புகள் சார்ந்த  நாடுகளில் கலாசார அமைச்சர்களுடன் இணையவழி மாநாட்டில் பிரதமர் கலந்துரையாடியிருந்தார். உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள “கொவிட் 19′ கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தினால் நாடுகளின் கலாசார துறைக்கு நேர்ந்துள்ள பாதிப்புகள் குறித்தும், தாக்கங்களை குறைத்துகொள்ளும் நோக்கில் யுனெஸ்கோ அமைப்புடன் தொடர்புகொண்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் இவ்வாறான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ சுட்டிக்காட்டியுள்ள காரணிகளானது,

இலங்கைக்கு 2500 ஆண்டுகால வரலாறுகள் உள்ளதென்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், எமது கலாசார தன்மைகள் நாட்டின் சுற்றுலாத்துறையுடன் அதிக தொடர்புகளை கொண்டுள்ள காரணத்தினால் நாம் எமது நாட்டின் சுற்றுலாத்துறையை அதிகம் நம்பியுள்ளோம். கடந்த 2018 ஆம் ஆண்டு எமது நாட்டின் சுற்றுலாத்துறை மூலமாக இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் கிடைத்தது. எனினும் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டதுடன் பல நெருக்கடிகளை நாடாக நாம் சந்திக்க நேர்ந்தது. இப்போது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட்- 19 கொரோனா வைரஸ் மூலமாக எமது நாடும் பாரிய அளவில் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இதனால் எமது நாட்டின் விமான நிலையங்களை முழுமையாக மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எமது சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.

எனினும் சர்வதேச சுற்றுலாத்துறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பலமான சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் எமது கலாசார, பண்பாட்டுடன் கூடிய சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கமாக நாம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்கின்றோம். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எமது நாட்டில் எமது கலாசார பண்பாட்டு பகுதிகளுக்கு பயணிக்கும் வேளைகளில் அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய நவீன தொழிநுட்ப செயற்திட்டங்களை முன்னெடுக்க சர்வதேச நிதி உதவிகள் எமக்கு தேவைப்படுகின்றது. இப்போது நிகழ்ந்துகொண்டுள்ள கடினமான சூழ்நிலையில் மிகவும் பாதுகாப்பான விதத்தில் உலக நாடுகளுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இலங்கையின் பண்பாடுகள், கலாசார தன்மைகள் குறித்து உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் மூலமாக செயற்பட விரும்புகின்றோம். இப்போதுள்ள சூழலை அனைவருமாக இணைந்து வெற்றிகொள்ள இவ்வாறான கலாசார பண்பாட்டு கருத்துப்பகிர்வுகள் கொண்ட வேலைத்திட்டங்கள் சாதகமாக அமையும் என நான் நம்புகின்றேன் என அவர் தனது கருத்துக்களை பகிர்ந்தகொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.