நேபாளத்திலிருந்து 76 மாணவர்கள்  இலங்கை வந்தனர்

கொவிட் -19 கொரோனா தொற்றுநோய் பரவல் அச்சத்தின் மத்தியில்  நேபாளம் காத்மாண்டு நகரில் உள்ள இலங்கை மாணவர்கள் 76 பேர்  நேற்று நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள மாணவர்களை அழைத்துவர இன்றும் விசேட விமானமொன்று இந்தியா நோக்கி பயணிக்கின்றது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கல்விகற்க சென்றுள்ள மாணவர்கள் தற்போது “கொவிட் -19” கொரோன வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கட்டம் கட்டமாக மாணவர்களை அழைத்து வருவதற்கான தீர்மானம் எடுத்த நிலையில் நேற்று முன்தினம்  இந்தியாவில் அம்ரிட்சா பிராந்தியத்தில் சிக்குண்டுள்ள 101 இலங்கை மாணவர்கள்  விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர். அதற்கு முன்னதாக  பாகிஸ்தானில் கல்வி நடவடிக்கைகளை தொடர சென்றிருந்த 113 இலங்கை  மாணவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் நேபாளம் காத்மாண்டு நகரில் உள்ள இலங்கை மாணவர்கள் 76 பேர் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வெவ்வேறு பிராந்தியங்களில் இலங்கை மாணவர்கள் பலர் இன்னமும் தங்கியுள்ள நிலையில் இன்றைய தினம் அவர்களின் ஒரு பிரிவினரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.