பிரதம அமைச்சரின் ரமழான் மாதத்திற்கான செய்தி!

உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் கோவிட் – 19 தொற்று காரணமாக முழு உலகும் பாரிய பிரச்சினையை எதிர் நோக்கியுள்ள சந்தர்ப்பத்திலேயே இம்முறை முஸ்லிம்கள் மிகவும் விமர்சையாகக் கொண்டாடும் நோன்புப் பெருநாளுக்கு முன்னரான நோன்பு நோற்கும் காலம் ஆரம்பிக்கிறது. கொரோனா வைரஸ் என்பது பணத்தினாலோ அல்லது அதிகாரத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத உலகளாவிய தொற்று நிலைமையாகும். இந்த தொற்று நிலைமை காரணமாக அனைத்து முஸ்லிம்களும் சமய, கலாசார, சமூக ரீதியாக பல சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணம் உள்ளனர்.

எனவே, இந்த வருடம் ஏனைய வருடங்களை விடவும் வித்தியாசமானதாக அமையும். இதன்போது அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதே உங்களது பொறுப்பும் கடமையும் ஆகும். அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் இடம்பெறுவதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அத்துடன் முஸ்லிம்கள் இந்த ரமழானுடைய காலத்தில் சுய கட்டுப்பாட்டுடன், பொறுமையை வளர்த்துக்கொண்டு பிறரின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவர்.
வறிய மக்களின் பசி, கஷ்டங்கள் உட்பட அனைத்து இன்னல்களையும் அதே போன்று அனுபவித்துணர்ந்து, ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதே ரமழான் கால நோன்பின் நம்பிக்கையாகும் என்பதை நாம் அறிவோம். அந்த தன்னலமற்ற குறிக்கோளை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நாம் அனைவரும் நாடு என்ற வகையிலும் , உலகம் என்ற வகையிலும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.
இதன்போது தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாத்து இந்த சவாலை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதே அனைவரினதும் கடமைப் பொறுப்பாக காணப்படுகிறது. இன்று உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடவுள் நம்பிக்கை வழங்குகின்ற ஆன்மீக எதிர்பார்ப்பு மற்றும் பலத்திற்கான தேவையைக் கொண்டுள்ளது. எனவே உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆசிர்வாதம் மற்றும் பிரார்த்தனையுடன், உங்களதும் நாட்டு மக்களினதும் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ரமழானுடைய காலத்தில் வீடுகளில் இருந்தவாறே சமய வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
இந்த ரமழான் மாதம் அனைத்து முஸ்லிம்களுக்கும் பக்தி மிகுந்ததாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
Leave A Reply

Your email address will not be published.