அரசியல் அமைப்பு ரீதியாக நெருக்கடியை உருவாக்கி நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்

உரிய தினத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வேறு தினத்தில் நடத்தலாம். இதுவொரு  பிரச்சினையில்லை என்கிறார் ஜனாதிபதி

உரிய தினத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியாது போனால் நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து மாற்றுத் தினத்தில் பொதுத் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை கூட்ட முடியும். இதனை மிகப்பெரிய பிரச்சினையாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என கூறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, அரசியல் அமைப்பு ரீதியில் நெருக்கடியை உருவாக்கி நாட்டினை குழப்ப சிலர் முயற்சித்துவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள், அரசியல் அமைப்பு ரீதியாக எழுந்துள்ள நெருக்கடிகள், தேர்தலை பிற்போட்டமை, மற்றும் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து மாநாயக தேரர்களை தெளிவுபடுத்தும் மாநாட்டினை நேற்று முன்தினம் பிற்பகல்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கூட்டியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி குறித்த காரணிகளை சுட்டிக்காட்டியிருந்தார். இதன்போது அவர் கூறியதானது,
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் தேர்தல் தினமொன்று அறிவிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. எனினும் நாட்டின் நிலைமையை அடுத்து தேர்தல் திகதியை அறிவிக்காது பிற்போடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இந்நிலையில் காலவரையறை இன்றி தேர்தல் திகதியை அறிவிக்காது தேர்தலை பிற்போடுவது அரசியல் அமைபிற்கு முரணானது என்பதை நான் அவர்களுக்கு சுட்டிக்காட்டிருந்தேன். அதனை அடுத்து தேர்தல் நடத்தக் கூறிய சூழல் இல்லாத காரணத்தினால் அதனை உணர்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு மாற்று திகதி ஒன்றினை அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கூடும் என நான் அறிவித்த ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு அப்பால் ஒரு தினமாக ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்றுமாத காலம் கடக்காது மீண்டும் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என கூறப்படுகின்றது. எனினும் இப்போது தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் மாதம் 20 ஆம் திகதியை அறிவித்துள்ளனர். இது நியமித்த திகதியை கடந்த ஒரு திகதி என்பது தர்க்கமாக உள்ளது. எனினும் நான் ஆரம்பம் முதற்கொண்டே அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டாமோ அவை அனைத்தையும் முன்னெடுத்துள்ளேன். எனினும் என்னால் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது. அப்படி கூட்டுவதென்றாலும் புதிய பாராளுமன்றம் ஒன்று இப்போதே நடைமுறையில் இருந்தால் மட்டுமே பாராளுமன்றம் கூட்ட முடியும்.  ஒரு சிலர் ஆரம்பத்தில் கொரோனா பிரச்சினையை காரணம் காட்டி தேர்தலை நடத்த வேண்டும்  என கூறினார்கள். அவர்களின் பெயர்களை குறிப்பிட நான் விருபவில்லை. தேர்தலை ஜூன் இரண்டாம் திகதிக்கு பின்னர் கொண்டு சென்று அதன் மூலமாக அரசியல் அமைப்பு பிரச்சினை ஒன்றினை உருவாக்கி அதனை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் நாட்டில் அனாவசிய பிரச்சினைகளை உருவாக்குவதுமே இவர்களது ஒரே நோக்கமாக இருந்தது.
நாட்டில் இப்போது நெருக்கடியான நிலையொன்று உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். உரிய தினத்தில் தேர்தலை நடத்த முடியாது, அவ்வாறு உரிய தினத்தில்  தேர்தலை நடத்த முடியாது போனால் காலம் கடத்தியாவது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றம் ஒன்றினை தெரிவு செய்த பின்னர் பாராளுமன்றத்தை கூட்ட முடியும். இதனை  மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படவேண்டிய அவசியம் இல்லை. அனாவசியமாக மக்களை குழப்பி நாட்டில் நெருக்கடி ஒன்றினை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் முதலில் நாடாக நாம் முன்னேற வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இன்று உலகமே வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றது.
எனினும் நாம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தேசிய உற்பத்திகளை பெருக்குவது, விவசாயம், கைத்தொழில் என்பவற்றையும் தொழிநுட்ப கல்வியையும் மேம்படுதுவத்கு குறித்து சிந்தித்து வருகின்றோம். இதில் மாநாயக தேரர்களினதும், நாட்டு மக்களினதும் முழுமையான பங்களிப்பு அவசியம் என்பதையும் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.