எக்காரணம் கொண்டும் பழைய பாராளுமன்றத்தை கூட்டவேண்டாம் – மாநாயக தேரர்கள் கூட்டாக  ஜனாதிபதிக்கு கோரிக்கை

அரசியல் அமைப்பு ரீதியில் குழப்பங்களை விளைவித்து நீதிமன்றத்தை நாடி நாட்டில் குழப்பங்களை விளைவிக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்ற நிலையில் எக்காரணம் கொண்டும் பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என மாநாயக தேரர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் பிற்போடப்படுவதால் நாட்டுக்கு எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை முதலில் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள், மக்கள் உங்களை அதிகமாக நம்புகின்றனர் எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

கொவிட் -19 கொரோனா வைரஸ் பரவலில் நாட்டின் தற்போதைய நிலவரம், அரசாங்கம் மக்களை பாதுகாக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து மாநாயக தேரர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மாநாயக தேரர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் கருத்துக்களை முன்வைத்த மாநாயக தேரர்கள்,
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் குறித்த மிகப்பெரிய அச்சமொன்று நிலவி வருகின்றது. மக்கள் ஒன்ருகூடுவதே மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், அனைவரும் வீடுகளில் இருக்குமாறும் வைத்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் இப்போது பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

எவ்வாறு இருப்பினும் அரசியல் அமைப்பு ரீதியில் முரண்பாடுகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தை நாடி அதன் மூலமாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஒரு சிலர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் இவை எதனையும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டாம்.
அரசியல் அமைப்பினை விடவும் நாட்டு மக்களின் பாதுகாப்பே இப்போது மிக முக்கியமானதாக உள்ளது. மக்களை நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனை கைவிட்டுவிடக்கூடாது. ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம். மக்களை கட்டுப்படுத்த அதுவே சிறந்த வழிமுறை என்பதே எமது நிலைப்பாடாகும். அதுமட்டும் அல்ல கோத்தாபய ராஜபக் ஷ இருப்பதால் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அவர் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே மக்களின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் நீங்கள் வேறு எந்த அரசியல் சூழ்சிகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல் நாட்டின் நிலவும் சூழலில் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என ஒரு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதையும் அவதானித்து வருகின்றோம். ஆனால் யார்  என்ன கூறினாலும் பழைய பாராளுமன்றத்தை கூட்டவே வேண்டாம். இப்போது தேர்தலுக்கோ அல்லது அரசியல் செய்யவோ உகந்த  நேரமல்ல. எனவே பாராளுமன்றம் இப்போது முக்கியமில்லை மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பது உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.