மக்கள் விடுதலை முன்னணியின் 2020 மே தின நிகழ்வில் கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையிலிருந்து சில …

இன்று முழு உலகும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி 3,310,494 பேர் பாதிக்கப்பட்டும், 234,112 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த பேரழிவு நமக்கு கூறுவதென்ன? உலகம் கற்றுக்கொண்ட பாடமென்ன? முன்னேறியுள்ளதாகக் கூறப்படும் உலகம் இன்று கொரோனாவின் முன்னால் கதிகலங்கிப் போயுள்ளது. உலக ஏகாதிபத்திய நாடுகளின் பிரசைகளை கொரோனா அடுத்தடுத்து பலியெடுத்து வருகிறது. உலக முதலாளித்துவத்தால் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்பதுவும் தீர்க்க தரிசனமாக வெளிப்பட்டுள்ளது. மனிதாபிமானத்தை சிதைத்த, மனித உயிர்களை மலிவாக மதிக்கும் முதலாளித்துவம் இன்று தோல்வி கண்டுள்ளது. அதனால், புதியதோர் பாதை உலக வாழ் மக்களுக்கு தேவைப்படுகிறது.

இன்று இலங்கையில் நடப்பதென்ன?

கடந்த 72 வருடங்களாக இலங்கை வாழ் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார நெருக்கடிக்குள் அமிழ்ந்துப் போயுள்ளனர். ஆட்சியாளர்கள் தமது இயலாமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, 72 ஆண்டுகள் தேவையில்லை! கடந்த இரண்டு மாதங்களை நாம் எடுத்தக் கொண்டால் போதும். இவர்கள் யார்? மக்களின் நண்பர்களா? இல்லை! இவர்கள் மக்களின் பாதகர்கள் என்பது தெரிய வருகிறது. அதிகார பேராசையுடன் செயற்படுகின்ற, மக்களின் சொத்துக்களை சூறையாடுகின்ற கொள்ளைக் கூட்டமாக இவர்கள் மாறியுள்ளனர்.
கொரோனா கடந்த வருடம் இறுதியில் இருந்தே பரவியது. நமது நாட்டை அந்த பாதிப்பிலிருந்து தடுத்திருக்க முடியும். அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் அதிகாரப் பேராசையுடன் செயற்பட்டதன் காரணமாக அவர்கள் இன்று நாட்டை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளனர்.

அதிகாரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டதினால் ஜனாதிபதிக்கு கிடைத்த முதல் நிமிடத்திலேயே மார்ச் 02ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 19ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அரசாங்க அமைச்சர்களான பவித்ரா, டலஸ் அலகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றனர். அவரகள் மட்டுமல்ல! ஜனாதிபதியும் சார்க் நாட்டு தலைவர்களுடன் தொழிநுட்ப வழியாக சந்தித்தப் போது, அதில் கொரானாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக தேர்தலை நடத்தப் போவதாகவும், தனது அண்ணன் ஏப்ரல் 25 ஆட்சிக்கு வரவுள்ளார் என்பதையுமே குறிப்பிட்டார்.

நமது நாடு ஒரு தீவு. இங்கு கொரோனா தொற்று வருவதென்றால் இரண்டே இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று விமான நிலையம் வழியாக, இரண்டு துறைமுகம் வழியாக. நமது நாட்டில் பல விமான நிலையங்களோ, பல துறைமுகங்களோ கிடையாது. அதனால், சரியான நடவடிக்கைகளை தூரநோக்குடன் மக்களைப் பற்றி சிந்தித்து முடிவெடுத்திருந்தால் இந்த கொரோனா ஆபத்திலிருந்த நமது நாட்டைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக அரசாங்கம் அதிகாரத்தை முதன்மையாகக் கொண்டுச் செயற்பட்டதினால், அதுவே ஆட்சியாளர்களின் இலக்காக இருந்ததினால் இந்த பேரவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் தேர்தல் ஆணையகமே தேர்தலைப் பிற்போட்டது. அதாவது நமது நாட்டு மக்களை கொரோனா ஆபத்திலிருந்து மீட்ட மீட்பாளர்களாகவே தேர்தல் ஆணையகத்தைக் குறிப்பிடலாம். அதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் வேண்டும். நமது நாட்டு ஆட்சிக் கும்பலான ராஜபக்சாக்கள் மக்களின் உயிரை துச்சமென மதித்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பேராசையுடன் செயற்படுவதுடன் நிற்காது தேர்தல் ஆணையகத்தின் மீது குற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசினர்.

இந்த நிலைமையின் கீழ் ஏப்ரல் 19ம் திகதி கொரோனா நாட்டை விட்டு ஓடிவிடப் போகிறதென சுகாதார அமைச்சர் பவித்ரா கூறினார். அதன்படி 22ம் திகதி ஊரடங்கு சட்டத்தை நீக்கப்போவதாகவும் குறிப்பிட்ட பின்னர், ஒரு சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டது.  ”ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அறிவூறை வழங்கியோர் யார்?” என்று நாங்கள் கோட்டாவிடம் கேட்கின்றோம். மக்களின் உயிரோடு விளையாடும் இந்த சதிராட்டத்திற்கு கோட்டாபய பொறுப்புக் கூறியாக வேண்டும்.

மருத்துவ வல்லுநர்களின் எந்தவிதமான பரிந்துரையுமின்றி ஊரடங்கை நீக்குவதற்கு எடுத்த முடிவு எதேச்சதிகாரமானது. அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு எதிராக மக்கள் செயற்பட்டனர்.

• அரசாங்கத்தின் அசமந்தப் போக்கின் காரணமாக இன்று NAVY யில் பலருக்கு கொரோனா.
• 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்ட மக்கள் பரிதவிப்பு
• அடையாள அட்டையெனும் போலி விளையாட்டு.
• அனுராதபுரத்தில் அரசாங்கம் ஊரடங்கை நீக்கும் போது வியாபாரிகள் கடைகளைப் பூட்டுகின்றனர். அது அரசாங்கத்திற்குக் கிடைத்தத் தோல்வி.

மக்களின் உயிர்களுக்குப் பொறுப்புக் கூறாத அரசாங்கம் அவர்களின் உயிருடன் விளையாடுகிறது. 5000 ரூபாய் நிவாரணமாக வழங்கும் (அதிலும் குளறுபடி) அரசாங்க புள்ளி விபரங்களின்படி, ஒரு குடும்பம் வாழ்வதற்கு 42,000 ரூபாய் வேண்டும். 5000 என்பது சொச்சத் தொகையாகும். உலக நாடுகளிடமிருந்த பல கோடி ரூபாய் நிதி அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளது. அவைகளுக்கு என்ன நடந்தது? என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாது.

• ஏப்ரல் மாதம் அறுவடை மாதம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்தவற்றை விற்க முடியாது திண்டாடுகின்றனர்.
• ஏற்றுமதியில் 42%  ஈட்டித்தரும் ஆடைத் தொழிற்சாலைகளின் வேலை செய்வோர் இன்று சம்பளமும் இல்லாது தமது தொழிலையும் இழக்கும் நிலையில் உள்ளனர்.
• உலகம் முழுவதிலும் 12½ கோடி பேருக்கு தனது தொழிலை இழக்கும் பேராபத்து தோன்றியுள்ளது.
• 14 இலட்சம் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வருமானமின்றி துன்ப நிலையில் உள்ளனர்.
• சுற்றுலாத்துறை பெரிய ஹோட்டல் மட்டுமல்ல, சிறிய 1 – 2 அறைகள் வைத்து தமது வாழ்க்கையை ஓட்டியோர் இன்று நடுத் தெருவிற்கு வந்துள்ளனர். உணவுப் பொதிகள் விற்போர், சிறிய கடைகளை நடத்தியோர் பாரிய நெருக்கடியில் உள்ளனர்.
• மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழில்புரிவோர் பாரிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.
• தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளம் வெற்றுப் பேச்சாக மாறியுள்ளது.

மக்களை துச்சமென மதிக்கும் ஆட்சிக் கும்பலின் நடவடிக்கைகளை பற்றி எதிர்வரும் மே 4ம் திகதி பிரதமர் ராஜபக்ச 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரி மாளிகைக்கு வரவழைத்துப் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்றைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே நாங்கள் கொரோனா ஒரு தேசிய அனர்த்தம். அதிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டோம்.

அவ்வாறான ஒரு திட்டம் தயாரிக்கப்படுமானால் அதற்கு எமது பூரண ஆதரவினையும் பங்களிப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தோம். ஆனால், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் செய்யாத ராஜபக்சாக்கள் இன்று விளையாட்டுப் பாராளுமன்றத்தை அலரி மாளிகையில் கூட்ட முனைகின்றனர். இந்த விளையாட்டுப் பாராளுமன்றத்தில் நாங்கள் கலந்துக்கொள்ள மாட்டோம்.

 

Leave A Reply

Your email address will not be published.