பிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி – பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தாங்கள் ஏற்கவில்லையெனவும் இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடத்தப்படவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் ஜே.வி.பி பிரதமருக்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கடிதத்தில் திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ஜே.வி.பி தலைவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்று பிரதமர் தலைமையில் மே 4ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் தில் கலந்துகொள்ளுமாறும் எமது கட்சியின் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 225 முன்னாள் எம்.பிக்களுக்கும் இவ்வாறாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடங்களினூடாக அறிந்துகொண்டோம்.
கொரோனா தொற்றை தோற்கடிப்பதற்காகவும் அதனுடன் இணைந்ததாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் செயற்படும் கட்சியென்ற வகையில் நாங்கள் எப்போதும் ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம். எதிர்காலத்திலும் வழங்குவோம். கொரோனா வைரஸை தோற்கடிப்பதற்கும் மற்றும் நிலவும் நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும் அரசிலமைப்பு ரீதியலான அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுவதற்கு பதிலாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடுவதனை சரியானதாக நாங்கள் பார்க்கவில்லை. குறிப்பாக தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக பொது பொறிமுறையொன்றை தயாரிக்குமாறு எமது கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதும் அதனை செய்யாது இவ்வாறாக முன்னாள் எம்.பிக்களை சந்திப்பது பொறுத்தமற்றது.
அத்துடன் தற்போதைய நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவராணங்களை வழங்குவது தொடர்பாக கலந்துரையாட வேண்டுமென்றால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் அனைவரையும் அழைத்து அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே ஆகும். இதற்கு முன்னர் உங்களின் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்ட வேளையில் நாங்கள் யோசனைகளை முன்வைத்திருந்தோம். மறுபக்கத்தில் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர் அரச செலவினங்களை செய்வதற்கு அதிகாரம் இல்லையென்ற கருத்துக்களும் மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 3 மாதங்களில் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட முடியாவிட்டால் ஏற்படும் அரசியலமைப்பு ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பாகவும் சமூகத்தில் தற்போது கருத்துக்கள் நிலவுகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே 225 முன்னாள் எம்.பிக்களும் கலந்துரையாடலுக்கா அழைக்கப்பட்டுள்ளனர். இதனூடாக அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை.
மேற் கூறிய பிரச்சினைகள் தொடர்பாகவே முன்னாள் எம்.பிக்களின் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்றால் முன்னெடுக்க வேணடிய சரியான நடவடிக்கைகளானது யாதெனில், ஜனாதிபதியினால் அரசியலமைப்புக்கமைய அவசரகால நிலைமையில் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுதல் அல்லது இந்த நிலைமையில் முன்னெடுக்க கூடிய அரசியலமைப்பு ரீதியலான செயற்பாடுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமென நாங்கள் கருதுகின்றோம்.
அவ்வாறு இன்றி அரசியலமைப்புக்கமைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக முன்னாள் எம்.பிக்களுக்கு தெளிவுபடுத்துவது பொறுத்தமற்றது எனவும் இதனால் 4ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் எமது கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என அறிவிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.