வெசாக் விடுமுறைகள் வரையில் ஊரடங்கு நீடிக்கும் அரச சுகாதார பணிப்பாளர்  தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கொரோனா தொற்றுநோய் சமூக பரவலாக மாறாத போதிலும் கூட கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகின்றது, எனவே எதிர்வரும் வெசாக் விடுமுறைகள் வரையில் நாட்டில் ஊரடங்க நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார்.
ஊரடங்கு தளர்க்கப்படுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்ற நிலையில் அது குறித்து சுகாதார அதிகாரிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களை கண்டறிய கையாளப்படும் பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனையை செய்யும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கூட வாரா வாரம் அதன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆயிரத்து முந்நூறுக்கும் அதிகமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் மேலும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நோக்கம் உள்ளது.
அதேபோல் ஊரடங்கை தளர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்படாது என நம்ப முடியும். அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய வைத்திய அதிகாரிகளுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் மூலம் அவ்வாறான நிலைப்பாடு ஒன்று எட்டப்படும் என்றே எமக்கு தெரிகின்றது. ஏனெனில் இம்மாதம் முதல் வாரம் நீண்ட விடுமுறை வருகின்ற காரணத்தினால் அந்த வாரம் ஊரடங்கை தளர்க்க முடியாத நிலைமையே உள்ளது. வெசாக் விடுமுறைகள்   முடிவும் வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஊரடங்கு தளர்க்கப்படுவதும் நோயாளர்கள் தொற்றுப் பரவலுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளது. பாதுகாப்பு படையினர் சிலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பரவல் இடம்பெறவில்லை. அதேபோல் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவதால் நோய் பூச்சியமாகவில்லை. நோய் தொற்று நின்றுவிட்டதாக சான்றிதழ் வழங்க முடியாது. எனினும் சில சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டினை செயற்படுத்த இடமளிக்க வேண்டும். ஒரு சில முறைகளில் நாட்டினை விடுவித்து நோய் தடுப்பு குறித்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இரண்டாம் சுற்று தாக்கங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது, ஏனைய நாடுகளில் அவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்தும் எத்தனை காலம் நாட்டினை முடக்குவது என்ற கேள்வி உள்ளது. ஐரோப்பிய நாடுகளை விடவும் ஆரோக்கியமான மட்டத்தில் நாம் உள்ளோம். எமது மருத்துவ வேலைத்திட்டம் உயரியதாக உள்ளது. ஆகவே அவற்றின் சாதகங்களை பயன்படுத்தி நாட்டினை விடுவித்து ஏனைய துறைகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.