2020 வெசாக் போயா தினச் செய்தி :  கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ  

இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது. கடுமையான அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் பௌத்தருக்கே உரித்தான மன அமைதியுடன் செயற்பட்டமையினால் இலங்கை வாழ் மக்களை அந்தத் தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுப்பதற்கான நேரம் மிகவும் அண்மித்துள்ளது. எனவே, நாம் தொற்றுநோயிலிருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் அல்லது சுகாதாரரீதியான சட்டதிட்டங்கள் தர்மத்தின் அடிப்படையிலான வாழ்வுக்குத் தடையாக அமைய மாட்டாது என்பதே எனது புரிதலாகும். இரண்டாயிரம் வருடங்களாக தர்மத்தின் அடிப்படையில் வாழ்வினைக் கழித்த பௌத்தர்களுக்கு வீட்டிலிருந்தவாறே பொருள் சார்ந்த மற்றும் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதற்கான ஒழுக்கப்பயிற்சி காணப்படுகிறது. வெசாக் தினத்தில் விளக்கேற்றி, அலங்காரங்களைச் செய்து உள மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்வது பௌத்தரின் பழக்கமாகும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தீமைகளிலிருந்து நீங்குவதற்கும் நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கும் எவ்விதத்திலும் தடையாக அமைவதில்லை.

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது. வாழ்க்கை நிலையற்றது எனவும், நிலையான எதுவுமில்லை எனவும் போதிக்கும் புத்த போதனையின் உண்மைத் தன்மையினை இந்த அனர்த்த நிலைமையில் முழு உலகும் புரிந்துக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறும் புத்த போதனை இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.

ஏனைய நாடுகளுக்கு முன்னரே கோவிட் தொற்றினை வெற்றி கொள்வதற்கு பௌத்தர்கள் பழகிய, பயிற்சி பெற்ற அந்த பணிவொழுக்கமே காரணமாக அமைந்தது என நம்புகிறேன். எனவே வெசாக் காலத்தில் உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் ஒழுக்கத்துடன் பேணி, மன அமைதியுடன் வாழ்வினை நோக்கி, மூவுலகிற்கும் கருணை காட்டி, நாம் மும்மணிகளினதும் ஆசியை வேண்டி நிற்போம். அனைத்து உயிர்களும் துன்பங்களின்றி, நோய்நொடிகளின்றி வாழப் பிரார்த்திப்போம்.

Leave A Reply

Your email address will not be published.