நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்க்க ஜனாதிபதி தீர்மானம்

சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் விதிமுறைகளை சகலரும் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11 ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பணித்துள்ளார். அதிபாதுகாப்பு வலயமாக கருதப்படும் மாவட்டங்களில்  சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய மக்கள் செயற்பட வேண்டும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்க்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கேட்டுக்கொண்டுள்ளதற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினமும், நேற்றும் கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்கா நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க கூறுகையில்,  இன்றில் இருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும். இந்த வாரம் வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாரத்தின் இறுதி நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை தினங்களாக உள்ள காரணத்தினாலும் மக்களின் அனாவசிய செயற்பாடுகளை குறைக்கும் விதத்திலும் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போதும் இந்த வாரம் கடுமையான சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்க்கப்படும். எனினும் இவ்வாறு தளர்க்கப்படும் ஊரடங்கு காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் கண்டிப்பாக கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது அறிவிக்கப்படும். குறிப்பாக ஊரடங்கு தளர்வுகாலமாக  குறிப்பிட்ட நேரம் வரையில் வழங்கப்படும். காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்க்கப்படும் அதேவேளை மீண்டும் இரவு 8 மணிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும். எனினும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு காலம் குறைக்கப்படலாம். ஏனைய மாவட்டங்களில் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும்.

தற்போது ஊரடங்கு தளர்க்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், அத்தியாவசிய நிறுவனங்கள், விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில்  இந்த தளர்வு காலத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வேலைப்பணிகளை ஆரம்பிக்க முடியும். ஆனால் நிறுவன தேவைக்கேற்ற ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் பொதுப்போக்குவரத்து சேவைகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். பேருந்துகளின் பயணிக்கும் வேளைகளில் ஆசனங்களுக்கு ஏற்ப மக்களை கொண்டுசெல்ல வேண்டும், அத்துடன் திரையரங்குகள் திறக்க இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. சிகை அலங்கார நிலையங்களும் திறக்க இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும் இந்த வார இறுதிக்குள் சிகை அலங்கார நிலையங்களை திறக்கக்கூடிய மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சகல பிரதான சிகை அலங்கார நிலையங்களுக்கும் கண்டிப்பாக கடைப்பிடக்க வேண்டிய வைத்திய அறிவுரை பிரதிகள் வழங்கப்படும். அதேபோல் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த எந்தவித தீர்மானமும் இன்னமும் எடுக்கப்படவில்லை.

மாணவர்களை இப்போது பாடசாலைகளுக்கு அனுமதிப்பதில் சில சிக்கல்கள் உள்ளதை கருத்தில் கொண்டே சுகாதார அதிகாரிகள் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர். தொற்றுநீக்கள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோல் மேலும் ஒரு சில வரங்கள் நிலைமைகளை அவதானித்து அதன் பின்னர் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார். ஊரடங்கு தளர்க்கப்பட்டாலும் கொவிட் -19 குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தொடர்ந்தும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியாக வேண்டும். அத்துடன் அனாவசியமாக மக்கள் ஒன்ருகூடுவதை, களியாட்டங்கள், விளையாட்டுப்போட்டிகள், ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் என எதனையும் நடத்தக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.