ஊரடங்கு தளர்க்கப்பட்ட சகல மாவட்டங்களிலும் நேற்றுமுதல் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் விற்பனையானது

 

ஊரடங்கு  தளர்த்தப்பட்டுள்ள சகல மாவட்டங்களிலும் நேற்று தொடக்கம் மதுபான விற்பனை நிலையங்கள்  மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல்பொருள் அங்காடிகளில் (சுப்பர் மார்க்கெட்) மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளுக்கு முன்னாள் மக்கள் கூட்டமும் குவிந்தது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நேரம் தொடக்கம் நாட்டில் சகல மதுபான சாலைகளும் மூடப்பட நிலையில் நேற்று மீண்டும் மதுபான சாலைகள் திறக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில்  மதுபான சாலைகள் வழமை போன்றே திறக்கப்பட்டுள்ளதுடன் ஊடங்கு தொடர்ந்தும் நீடிக்கும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களிலும் பல்பொருள் அங்காடிகளில் மதுபானம் கொள்வனவு செய்ய மதுவரித்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னாலும் மற்றும் கொழும்பில் பல்பொருள் அங்காடிகளுக்கு அருகிலும் நீண்ட வரிசைகள் மமதுப்பிரியர்கள் வரிசைகட்டி நின்றதை அவதானிக்க முடிந்தது. இதனால் குறித்த  இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
கொழும்பு உள்ளிட்ட 5 மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை பகல் நேரத்தில் தளர்த்த நடவடிக்கையெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் திகதி குறித்த மாவட்டங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்ட போதும் அதன்போது எழுந்த எதிர்ப்புகளையடுத்து மீண்டும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் பல்பொருள் அங்காடிகளில் மாத்திரம் மதுபான விற்பனை இடங்களை திறப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுபான கொள்வனவுக்கு செல்வோர் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு , மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பல்பொருள் அங்காடிகளில் அடையாள அட்டையின் இறுதி இலக்க அடிப்படையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் அவற்றை விநியோகிப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.