“மே 18” முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியாக வீடுகளில் நினைவுகூருவோம் – தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன்

தமிழின அழிப்புத் தினமும், தமிழ்த் தேசிய துக்க நாளாக கருதப்படும் தினமே மே 18ஆம் திகதியாகும். ஆகவே தமிழர்களின் துக்க தினத்தை அனுஷ்டிக்க சகல தமிழர்களுக்கும் உரிமை உள்ளதென கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் ஒன்றுகூடலை தடுத்துள்ள காரணத்தினால் வீடுகளில் சகலரும் அமைதியாக துக்கதினத்தை சுடரேந்தி அனுஷ்டிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று அனுஷ்டிக்க தமிழர் தயாராக உள்ள நிலையில் அரசாங்கம் அதற்கான அனுமதியை மறுத்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரானது தமிழ் மக்களை மிக மோசமாக பாதித்துள்ளது.

இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் தமிழர்கள் பலர் முள்ளிவாய்க்கால் மண்ணில்  கொல்லப்பட்டனர் .இராணுவம் இந்த சதர்ப்பதில் யுத்த குற்றங்களையே செய்தது. தமிழர் மீதி நடத்தப்பட்ட இந்தத் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் நானும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும்  பல உரைகளை ஆற்றியுள்ளோம். யுத்தத்தை உடனடியாக நிறுத்தும்படியும் வலியுறுத்தினோம். இந்த யுத்தத்தினால் தமிழ் மக்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். பெருந்தொகையான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

எமது மக்களின் சொந்த வீடுகள், சொத்துகள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு சர்வதேச சமூகத்தை இன்று நாம் கோரி நிற்கின்றோம்.
தமிழின அழிப்புத் தினமாகவும், தமிழ்த் தேசிய துக்க நாளாகவும் இந்த நாள்  அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வருடந்தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இதில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு பங்கேற்பார்கள். ஆனால், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த வருடங்கள் போன்று இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனைவரும் பங்கேற்று உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரையான காலப்பகுதியில் இறுதிப் போரில் இழந்த எமது உறவுகளை வீடுகளில் சுடர் ஏற்றி  அஞ்சலி செலுத்தி நினைவுகூர வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலமாக போரின்போது உயிரிழந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தியடையும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.