கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் – அதிர்ச்சி தரும் தகவல்

கொரோனா பெருந்தொற்றால், உலக பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 6.4 முதல் 9.7 சதவீதம் வரை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். கடந்த மாதம் கணிக்கப்பட்டதை விட, பாதிப்பு சதவீதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்புகளிலிருந்து தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மீட்க உலக நாடுகள் பல திட்டங்களை முன்வைத்துள்ளன.

”கோவிட்-19 வைரஸ் உலக பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை இந்த பகுப்பாய்வு தெளிவாகக் காட்டுகிறது. பொருளாதார சேதங்களைச் சரிப்படுத்த, கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது முக்கியம்’’ என்கிறார் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவாடா.

பயணங்களும், தொழிலும் ஆறு மாதங்களும் பாதிக்கப்பட்டால் பொருளாதார பாதிப்பு அதிகபட்சமாக இருக்கும் என்றும், மூன்று மாதங்களுக்கு இதே கட்டுப்பாடுகள் நீடித்தால் குறைந்தபட்ச பாதிப்பு இருக்கும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

கொரோனா வைரஸால் நிதிச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் உலகளாவிய மந்தநிலை ஏற்படலாம் என அச்சங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த தக்கங்களிலிருந்து மீள வட்டி விகிதங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல தீவிர நடவடிக்கைகளை உலகில் உள்ள பல வங்கிகள் எடுத்துள்ளன.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது கொரோனா வைரஸ். வேலையில்லாததால் சலுகைகளை எதிர்பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் மூன்று மில்லியனான உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு வேலை செய்தவர்களில், கால்வாசி பேர் தற்போது அரசு சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.

‘’ முன்பு கணித்ததை விட, அமெரிக்காவின் பொருளாதாரம் மெதுவாகவே மீளும்’’ என்று அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் போவெல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை சமாளிக்கப் பிரிட்டன் அரசு 123 பில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இது பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 15 சதவீதமாகும்.

நன்றி : பிபிசி தமிழ் 

Leave A Reply

Your email address will not be published.